புத்தாக்க இந்திய கலையகம், கலைத் தூரிகை எனும் தேசிய தின சிறப்பு நிகழ்ச்சியை இணையத்தில் இரண்டு பாகங்களாக முழுநீள முப்பரிமாண மெய்நிகர் நிகழ்ச்சி வடிவில் படைத்தது.
ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஒளியேறிய முதல் பாகம் முழுக்க முழுக்க சிங்கப்பூரின் புகழைப் பாடியது. அன்று முதல் இன்று வரை கலைப்படைப்புகளை வழங்கி வரும் நம்நாட்டு கலைஞர்களுடன் வெளிநாட்டுப் படைப்பாளர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஐந்து வயது முதல் 90 வயது வரையுள்ள படைப்பாளர்களின் அங்கங்கள் தொழில்நுட்ப ஏற்றத்துடன் முதல்முறையாக '360' கோண ஒலி, ஒளி அமைப்பில் கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுடன் முழுக்க முழுக்க வெளிப்புறத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. கரையோரப் பூந்தோட்டத்தில், மவுண்ட் ஃபேபர் கம்பிவண்டி நிலையம் என பல அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி படைக்கப்பட்டது.
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயரின் சிறப்புரையுடன் திரு வெ பாண்டியன், திரு ESJ சந்திரன், திரு SA நாதன், திரு சங்கர் ராஜன், திரு. கார்த்திகேயன், திரு டாக்டர் டி. சந்துரு, திருமதி மனுநீதிவதி, திருமதி மீனாட்சி சபாபதி ஆகியோரின் தேசிய தின நினைவுகள் அன்று முதல் இன்றுவரை வரலாற்றில் தடம் பதித்த சிங்கப்பூரை படம் பிடித்துக் காட்டியது. அவை முப்பரிமாண காணொளிகளாக (VR/AR-Mixed Reality) காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் (iMDA-Pixel Studios) ஆதரவில் சிறப்பு ஒளிப்பதிவு கூடத்தில் இருந்து உருவாக்கப்பட்டன.
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி இரவு எட்டு மணிக்கு ஒளியேறிய 2வது நிகழ்ச்சியில், நம் நாட்டுக்கு தங்களின் அயராத உழைப்பை தந்து வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் ஜேடிசி அமைப்பின் 'புரோஜெக்ட் டாம்' திட்டத்தின் கீழ் இடம்பெற்றது. ஜவகர், செந்தில்நாதன், ஷெரின் ஆகிய வெளிநாட்டு ஊழியர்களின் உண்மை உணர்வுகளைக் கண்டு கேட்டு உணர முடிந்தது. கவிஞரேறு அமலதாசன் இயற்றிய 'சிங்கப்பூர் என்று' எனும் தேசிய விருதுபெற்ற பாடல், சி. குணசேகரனின் இசையமைப்பில் புதிய காட்சி வடிவில் வண்ணமயமாக புதுப்பொலிவுடன் ஒளியேற்றம் கண்டது. திருமதி பாக்கியா மூர்த்தி, திரு டி.கே. மோகன் போன்ற மூத்த கலைஞர்களுடன் இலங்கையின் திரு ரகுநாதன் சிறப்பு கலைஞராக பாடினார். அவர்களுடன் லலிதா, சரஸ்வதி, சுவாமிநாதன், ராஜா ஆகியோரின் இளமை துள்ளும் இனிய கானங்களும் இடம்பெற்றன. மேலும் கண்கவர் நடனங்கள், நகைச்சுவை அங்கம் என பல அங்கங்களும் மகிழ்வித்தன.
இணைய உலகின் புகழ்பெற்ற 51 சமூக ஊடகத் தளங்களில் கலைத் தூரிகை தேசிய தின சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பின்வரும் இணைய ஒளிபரப்பில் அந்த நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். தேசின தின சிறப்பு நிகழ்ச்சி: https://www.youtube.com/watch?v=Tt_iqhzG1ngதேசிய தின 'புரோஜெக்ட் டாம்' நிகழ்ச்சி: https://youtu.be/-Ud5hAlv0RU. தேசின தின நேரடி உரையாடல் நிகழ்ச்சி: https://youtu.be/KBzA5-2N39E

