இம்மாதம் 8ஆம் தேதி இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த கப்பல் ஒன்றில் இருந்த 10 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளன்று தொழில்நுட்பர் ஒருவர் அந்தக் கப்பலில் ஏறி பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டார். வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் 47 வயது மலேசியராவார் அவர்.
அந்தக் கப்பலில் இருந்த பணியாளர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தொழில்நுட்பர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சனிக்கிழமை அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரிடம் தொற்றுக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
சம்பந்தப்பட்ட அந்தக் கப்பலுடன் தொடர்பில் இருந்த கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டாவது தொழில்நுட்பராவார் அந்த மலேசியர். அவருக்கு முன்னதாக பிலிப்பீன்சை சேர்ந்த தொழில்நுட்பர் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இம்மாதம் 8, 12 ஆகிய தேதிகளுக்கு இடையில் அதே கப்பலில் அந்தத் தொழில்நுட்பர் ஏறினார். அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று சமூக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டாமவர் 48 வயது சிங்கப்பூர் ஆடவர். முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவத்துடன் அவருக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

