சிங்கப்பூர் விமான நிறுவனங்களில் பணிபுரியும் விமானிகளும் விமான சிப்பந்திகளும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய பிறகு கொரோனா கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இங்கு சமூக அளவில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைவதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
"ஏற்கெனவே நடப்பில் உள்ள நடைமுறைகள் சிங்கப்பூர் விமானப் பணியாளர்களைக் கிருமித்தொற்றுப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஆக்கபூர்வமாக உள்ளன. இதன் பலனாக, மூன்று மாதங்களுக்கு மேலாக அவர்களில் எவருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை.
"என்றாலும், கிருமிப் பரவலுக்கு எதிராக விழிப்புநிலை தொடர வேண்டியுள்ளது. அந்த வகையில், விமானப் பணியாளர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனையை மேற்கொள்வதால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கமுடியும். ஏனெனில், நாடு திரும்பும் விமானப் பணியாளர்களுக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்," என்று ஆணையம் விளக்கியது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர், ஸ்கூட், ஜெட்ஸ்டார் ஏஷியா ஆகிய நான்கு உள்ளூர் விமான நிறுவனப் பணியாளர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும். குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் விமானப் பணியாளர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சீனா மற்றும் ஹாங்காங்கிற்குச் சென்று சிங்கப்பூர் திரும்புவோரைக் கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்த தேவை இருக்காது. தங்களது சொந்த வசிப்பிடத்திலேயே அவர்கள் வீட்டில் இருக்கும் உத்தரவை நிறைவேற்றலாம்.
விமானப் பணியாளர்கள் வேலை செய்யும் நேரத்தில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு அந்த விமானம் மீண்டும் சிங்கப்பூர் திரும்பவிருந்தால், விமானப் பணியாளர்கள் விமானத்தைவிட்டு வெளியேற மாட்டார்கள்.
மாறாக, பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடித்து, எல்லா நேரங்களிலும் அவர்களுக்காக ஒதுக்கப்படும் தங்குமிடங்களில் அவர்கள் இருப்பார்கள். இதன் காரணத்தால் அவர்கள் சிங்கப்பூர் திரும்பியவுடன் அவர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனையை மேற்கொள்ள அவசியம் இல்லை.

