சாதனை; வீவக நான்கறை வீடு 1.1 மி. வெள்ளிக்கு விற்பனை

சாதனை; வீவக நான்கறை வீடு 1.1 மி. வெள்ளிக்கு விற்பனை

2 mins read
54328e88-580b-494f-86bb-0c4f46ff62bf
-

தியோங் பாரு வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் நான்கறை வீடு ஒன்று சாதனை அளவாக 1.1 மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்டுள்ளது.

அதன் 99 ஆண்டு குத்தகை காலத்தில் 51 ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

புளோக் 43 மோ குவான் டெரசில் அந்த வீடு அமைந்துள்ளது. அது, இம்மாதம் 1,088,000 வெள்ளிக்கு விலை போனதை வீவகவின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இந்த வீட்டின் விற்பனையை முடித்துக்கொடுத்த புரோப்நெக்ஸ் சொத்து முகவரான வோங் ஹான் யீ, வீட்டின் அளவு மற்றும் அமைவிடத்தைப் பார்த்தால் இது ஒரு அரிதான வீடு என்று குறிப்பிட்டார்.

வீட்டின் குத்தகை காலம் 1973ல் தொடங்கியுள்ளது. வீட்டின் அளவு 131 சதுர மீட்டர். இதனை நான்கறை வீடாக வீவக வகைப்படுத்தப் படுத்தியுள்ளது.

இரண்டு ஈரறை வீடுகளை இணைத்து இந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது.

"சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் வீடு அமைந்துள்ளது. வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில்தியோங் பாரு எம்ஆர்டி இருக்கிறது. ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து இரண்டு பேருந்து நிறுத்துமிட தொலைவில் புதிய ஹவ்லாக் நிலையமும் அமையவிருக்கிறது," என்று நியூ பேப்பருக்கு அளித்த பேட்டியில் திருவாட்டி வோங் விவரித்திருந்தார்.

கடந்த ஆண்டு 3வது காலாண்டில் வீடு விற்பனைக்கு வெளியிடப்பட்டபோது பலர் ஆவலுடன் வாங்க முன்வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இளம் குடும்பத்தினர் என்றார் அவர்.

'ஜம்போ' வீடு என்று குறிப்பிடப்படும் பெரிய வீட்டைப் போல இந்த வீடும் அளவில் பெரியது. உட்லண்ட்ஸ், ஈசூன் போன்ற வட்டாரங்களில் மட்டுமே பெரிய வீடுகள் கிடைப்பது வழக்கம். ஆனால் மத்திய வட்டாரத்தில் இத்தகைய வீடுகள் கிடைப்பது மிகவும் அரிது. மேலும் வீட்டின் அமைப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வீட்டின் பெரும்பாலான உட்புற சுவர்களை இடித்துக் கட்ட முடியும். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப இடவசதியை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

"இந்த வட்டாரமும் பாரம்பரியமிக்கது. தியோங் பாரு மரபுடைமைப் பாதையிலும் பழமைப் பாதுகாப்பு வட்டாரத்துக்கு அருகேயும் மோ குவான் டெரஸ் இடம்பெற்று உள்ளது. வீடும் தனிச்சிறந்த தோற்றத்தைப் பெற்றுள்ளது. பழைய காலத்தை ரசிக்கும் எண்ணம் கொண்டவர்கள் இங்கு வீடு வாங்க விரும்புவார்கள் என்று திருவாட்டி வோங் மேலும் சொன்னார்.

அண்மைய காலமாக தியோங் பாருவின் சுற்றுப்புறம் துடிப்புமிக்க நகரமாகவும் உருவாகிவருகிறது.

"ஃபார்ட்டி ஹாண்ட்ஸ்', 'தியோங் பாரு பேக்கரி' போன்ற நவீன உணவகங்கள், கடைகள் இங்கு தொடங்கப்பட்டுள்ளன.

தியோங் பாருவில் பத்து ஆண்டு கால நான்கு அறை சாதாரண வீவக வீடு 700,000 வெள்ளி முதல் 800,000 வெள்ளி வரையில் விற்கப்படுவதாக வோங் தெரிவித்தார்.