சுடச் சுடச் செய்திகள்

குப்பைத்தொட்டியில் சிசுவை வீசி கொல்ல முயன்ற தாய்க்கு 18 மாதச் சிறை

தான் ஈன்றெடுத்த ஆண் சிசுவைக் கொல்லும் நோக்கில், வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மூன்றாம் தளத்தில் இருந்து அதனைக் குப்பைத்தொட்டியில் வீசிய 27 வயது பெண்ணுக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி 7ஆம் தேதி காலை 6.15 மணியளவில் அவர் அந்தக் குற்றச்செயலைப் புரிந்தார்.

அன்றைய நாள் காலையில், பிடோக் நார்த்தில் உள்ள தமது வீட்டில் இருந்தபோது அடிவயிற்றுப் பகுதியில் அவர் வலியை உணர்ந்தார். 

அதையடுத்து, கழிவறைக்குச் சென்ற அவர், அங்கு ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அதன்பின் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக் கட்டி, குப்பைத்தொட்டியில் வீசியெறிந்தார். பின்னர் வீடு திரும்பிய அவர், தரையில் சிந்தியிருந்த ரத்தத்தைத் துடைத்து, குளித்துவிட்டு, தூங்கச் சென்றார். தமது செயலைப் பற்றி எவரிடமும் அவர் சொல்லவில்லை. .

மூன்றாவது மாடியிலிருந்து குழந்தையை குப்பைத்தொட்டிக்குள் வீசியதாகக் கூறப்பட்டது.

காலை 8.30 மணியளவில், அந்த புளோக்கில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்த குப்பைகளை அகற்றச் சென்றபோது, அதிலிருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் வருவதைத் துப்புரவாளர்களான திரு பட்வாரி ஷமினும் திரு கமால் மொஸ்தஃபாவும் கேட்டனர். 

தொட்டியின் மேற்புறத்தில் இருந்த செய்தித்தாளை  விலக்கிப் பார்த்தபோது, அந்தக் குழந்தையை வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் போட்டு, முடிச்சிடப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டனர்.

உடனடியாக அது குறித்து தங்கள் மேற்பார்வையாளருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அல்ஜூனிட் - ஹவ்காங் நகர மன்ற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அக்குழந்தையைக் கண்டனர்.

பின்னர் போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவசர மருத்துவ வாகனத்தின் மூலம் அக்குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மறுநாள் அக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று போலிஸ் விசாரித்தபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என அவ்வீட்டார் கூறிவிட்டனர்.

தாம் கருவுற்றிருந்தது தமக்குத் தெரியாது என்று அந்தப் பெண் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரசவத்திற்குப் பிந்திய மனஅழுத்தத்தால் அப்பெண் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஆயினும், குற்றமிழைத்தபோது அவருக்குப் பெரிய மனநோய் எதுவும் இல்லை என்று மனநலக் கழக அறிக்கை தெளிவுபடுத்தியது.

முன்னதாக, போதை மருந்து உட்கொண்டதற்காக போதையர் மறுவாழ்வு நிலையத்திற்கு அவர் சென்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அக்குழந்தையின் தந்தை குறித்த விவரம் எதுவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. இப்போது வளர்ப்புப் பெற்றோரிடம் அந்தக் குழந்தை வளர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon