அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாகத் திகழ்ந்து, நிறுவனங்கள் வளரவும் நெருக்கடியான சூழல்களில் இருந்து மீளவும் உதவுவதில் வர்த்தகச் சங்கங்களும் தொழிற்சபைகளும் முக்கிய பங்கு வகிப்பதாக வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூர் சீன வர்த்தக தொழிற்சபை நடத்திய வருடாந்திர வர்த்தகக் கருத்தாய்வில், அதனுடைய 1,020 உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினரின் வருவாய் குறைந்து இருப்பதை முதற்கட்ட முடிவுகள் காட்டுவதாகக் கூறினார்.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பெரும்பாலும் சிறிய, நடுத்தர நிறுவனங்களே பங்கேற்றன.
சிங்கப்பூர் சீன வர்த்தக தொழிற்சபையின் வருடாந்திரக் கருத்தரங்கு மெய்நிகர் முறையில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருவாட்டி லிம், 1997ல் ஆசிய நிதி நெருக்கடி, 2003ல் சார்ஸ் பரவல், 2008ல் உலகளாவிய நிதி நெருக்கடி என கடந்த காலங்களில் பல சவால்களை சிங்கப்பூர் கடந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தங்களது தயாரிப்புகளை இணையம் வழியாக வெளிநாடுகளில் சந்தைப்படுத்த உதவும் 'குரோ டிஜிட்டல்' போன்ற அரசாங்கத்தின் திட்டங்களை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
நிதியாதரவு, ரொக்கப் புழக்கம், அதிகரித்து வரும் வர்த்தகச் செலவுகள், வெளிநாடுகளில் நிலவும் நிச்சயமற்ற பொருளியல், அரசியல் சூழல் என நிறுவனங்கள் இப்போது சந்தித்து வரும் பிரச்சினைகளை சிங்கப்பூர் சீன வர்த்தக தொழிற்சபைத் தலைவர் ரோலண்ட் இங் பட்டியலிட்டார்.
ஆயினும், ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 8% நிறுவனங்கள் மட்டுமே ஆட்குறைப்பு செய்ததாகவும் 70% நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கையைப் பேணி வருவதாகவும் கூறப்பட்டது.

