குடிமைத் தற்காப்பு வீரர் மரணம்: அதிகாரியின் கவனக்குறைவான செயல் நிரூபணமானது

2 mins read
ae53fd15-f161-41bd-aad4-76eca975ad98
அச்சம்பவம் நடக்கும்போது திரு நஸான் முகம்மது நாஸி (வலது), அந்தத் தீயணைப்பு நிலையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். அவரது சகாவான 40 வயது திரு சோங் சூ பூன் தலைவராக இருந்தார். படம்: எஸ்டி, வோங் குவாய் சாவ். -

ஈராண்டுகளுக்கு முன் தமக்குக் கீழ் சேவையாற்றிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முழுநேர தேசிய சேவையாளரின் மரணத்துக்கு, அவரது மேலதிகாரி ஒருவரின் கவனக்குறைவான செயல்தான் காரணம் என்பது நீதிமன்றத்தில் நேற்று உறுதிப்படுத்தப் பட்டது.

நஸான் முகம்மது நாஸி (படம்) எனும் அந்த 42 வயது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி, 2018ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி நடந்த பகடிவதை செயலை தமக்குக் கீழ் பணியாற்றிய இதர வீரர்கள் மேற்கொண்டதைத் தடுக்க முயலவில்லை எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

அவ்வீரர்கள் தங்கள் சகாவான கார்ப்பரல் கோக் யுவன் சின்னை, துவாஸ் தீயணைப்பு நிலையத்தில் உள்ள 12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்க வற்புறுத்தினர். திரு கோக் அதற்கு இணங்க மறுக்கவே, அவர்களில் ஒருவரான முகம்மது நூர் ஃபட்வா மஹ்முத் திரு கோக்கை கிணற்றுக்குள் தள்ளி விட்டார். அதையடுத்து திரு கோக் நீரில் மூழ்கி இறந்துபோனார்.

அச்சம்பவம் நடக்கும்போது திரு நஸான், அந்தத் தீயணைப்பு நிலையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். அவரது சகாவான 40 வயது திரு சோங் சூ பூன் தலைவராக இருந்தார்.

வேண்டுமென்றே சக வீரருக்குக் கடுமையான காயம் விளைவிக்க முயன்ற தேசிய சேவையாளர்களுக்கு உதவும் நோக்கில் அந்த இரு அதிகாரிகளின் செயல் இருந்ததாக அவர்கள் மீது ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆனால், அவர்கள் இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை எதிர்க்க முடிவெடுத்தனர்.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு நான்காண்டு வரை சிறை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பின்னர் அவர்களின் குற்றம், மரணம் நிகழ்வதைத் தடுக்க தவறிய கவனக்குறைவான செயல் என்று மூத்த மாவட்ட நீதிபதி ஓங் ஹியான் சுன்னால் திருத்தப்பட்டது.