கெப்பல் சாலையில் அமைந்துள்ள பிரபலமான பிரீமா டவர் சுழலும் உணவகம் 43 ஆண்டுகளுக்குப் பிறகு தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. கொவிட்-19 நெருக்கடி காரணமாக அந்த உணவகம் மூடப்பட்டுவிட்டது.
"உணவகத்தை மூடுவதாக எடுத்த முடிவு எளிதானதாக இருக்கவில்லை," என்றார் அதன் தலைமைச் செயல் அதிகாரி திரு கோங் யோங் இயோ.
முன்னதாக, இவ்வாண்டு ஏப்ரல் 6 முதல் ஜூலை 31 வரை உணவகத்தைத் தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டது.
"ஆயினும், கொரோனா நோய்ப் பரவல் உணவு, பானத் துறையில் ஏற்படுத்திய தாக்கம் எதிர்பார்க்கப்படாதது. இதையடுத்து, சுழலும் உணவகம் நிரந்தரமாக தனது கதவுகளை மூடுகிறது," என்று திரு கோங் சொன்னார்.
பிரீமா குழுமத்தால் 1977ஆம் ஆண்டில் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. முதலில் மாவு ஆலையாகத் தொடங்கப்பட்டு, பின் மற்ற உணவு வர்த்தகத்திலும் அந்நிறுவனம் ஈடுபட்டது. தரையிலிருந்து 60 மீட்டர் உயரத்தில், உருளை வடிவிலான கோதுமை குதிருக்கு மேலே அமைந்துள்ள இந்த உணவகம், சீனப் பாரம்பரிய உணவுவகைகளுக்குப் பெயர்பெற்றது.
பாதிக்கப்பட்ட 30 ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு அனுகூலங்கள் வழங்கப்பட்டதாக திரு கோங் தெரிவித்தார். அத்துடன், அவர்கள் வேறு வேலை தேடிக்கொள்ள உணவு, பானங்கள் மற்றும் சார்புத் தொழிலாளர்கள் சங்கம், சிங்கப்பூர் ஊழியரணி ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரீமா டவர் சுழலும் உணவகம் மூடப்பட்டதை அடுத்து, இப்போதைக்கு கோலியர் கீயில் அமைந்துள்ள 'டோங் லீ பிரைவேட் டைனிங்' மட்டுமே சிங்கப்பூரின் ஒரே ஒரு சுழலும் உணவகமாகத் திகழ்கிறது.

