ஆய்வு: 35 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட ஊழியர்களுக்கே கடுமையான பாதிப்பு

ஆய்வு: 35 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட ஊழியர்களுக்கே கடுமையான பாதிப்பு

2 mins read
da2b6816-dae2-4389-b393-227ce5aa6de2
-

கொவிட்-19 கொள்ளைநோயின் பிடியில் சிக்கி அதிகம் பாதிக்கப்பட்ட பிரிவினர், 35 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட ஊழியர்கள் என்று டிபிஎஸ் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

கிருமித்தொற்று சூழலால் ஏற்பட்ட மோசமான பொருளியல் நிலை, இப்பிரிவினரின் சம்பளத்தைப் பாதித்துள்ளது. இதனால் இவர்களில் 25 விழுக்காட்டினருக்கும் மேலானோர், கடந்த மாதங்களில் தங்களின் வருமானத்தில் சரிவைச் சந்தித்தனர். பாதிக்கும் மேலானோருக்கு இந்தச் சரிவு 30% மேல் இருந்ததாக அறிக்கை தெரிவித்தது.

35-44 வயது ஊழியர்களுக்கு குறைவான ஆதரவுத் திட்டங்கள்

நாட்டின் ஊழியரணியில் பெரும்பான்மை வகிக்கும் இந்தப் பிரிவினருக்கு, மூத்த ஊழியர்களைக் காட்டிலும் குறைவான ஆதரவுத் திட்டங்களே உள்ளன என்று ஆய்வறிக்கையைத் தயாரித்த குழுவைச் சேர்ந்த எர்வின் சியா கூறினார்.

சம்பள உதவித்தொகை திட்டம், வேலைநலன் துணை வருமானத் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் மூத்த ஊழியர்களுக்கு அதிக ஆதரவு உள்ளது. நடுத்தர வயதுடைய ஊழியர்களுக்கு இளைய ஊழியர்கள் கூடுதல் போட்டித்தன்மை கொடுப்பர். அத்துடன் தங்களின் கூடுதல் சம்பளத்தாலும், ஊதியம் குறைக்கப்படும் சூழலுக்கு அவர்களே எளிதில் ஆளாகிறார்கள் என்று திரு சியா குறிப்பிட்டார்.

குறைந்த வருமான ஊழியர்களுக்கு நெருக்குதல்

குறைந்த வருமான ஊழியர்கள் அதாவது மாதம் $3,000க்குக் கீழ் சம்பளம் ஈட்டுவோரும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு அவர்களின் சம்பளத்தில் சரிவு ஏற்பட்டது. இவர்களில் 51 விழுக்காட்டினருக்கு 50% மேல் சம்பளக் குறைப்பு பதிவானது.

சம்பளக் குறைப்பினால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யப் பலருக்குப் போதுமான சேமிப்பும் இல்லை என்று கண்டறியப்பட்டது. குறிப்பிடத்தக்க சம்பள இழப்பு ஏற்பட்ட 64% ஊழியர்களுக்கு மூன்று மாதம்கூட நீடிக்க முடியாத சேமிப்பு நிதி இருந்ததாகக் கூறப்பட்டது.

ஆகாயத்துறை ஊழியர்களுக்கும் பாதிப்பு அதிகம்

தொழில்துறைகள் என்று பார்க்கும்போது, அதிகமாக ஆகாயத்துறையில் உள்ள ஊழியர்களுக்கே சம்பளச் சரிவு ஏற்பட்டிருந்தது. மே மாதத்தில் இத்துறையைச் சேர்ந்த 81% ஊழியர்களுக்கு வருமானம் குறைந்திருந்தது. மார்ச் மாதத்தில் 39% ஊழியர்கள் மட்டுமே இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், திரு சியா கொவிட்-19 கொள்ளைநோயை வருணித்தபோது, "சிங்கப்பூரில் வருமான இடைவெளியை அதிகரித்துப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் ஒரு சூழல்" என்றார்.

"வெவ்வேறு வருமானப் பிரிவினர் மீது கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கம், முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது; சரிசமமானதாக இல்லை. குறைந்த வருமான ஊழியர்களுக்கும் கிருமித்தொற்றின் தாக்கம் பாதகமாக அமைந்துள்ளது," என்றார் டிபிஎஸ் குழுமத்தின் ஆய்வுப் பிரிவில் மூத்த பொருளியலாளராக உள்ள திரு சியா.

'டிபிஎஸ்' வங்கியைத் தங்கள் சம்பளம் பெறும் வங்கி நிறுவனமாகக் கொண்டுள்ள 1.2 மில்லியன் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளிலிருந்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் வயது 25க்கும் 70க்கும் இடைப்பட்டதாக இருந்தது.

இளம் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்வதில் கூடுதல் ஈடுபாடு காட்டுவதாகவும் இந்தப் போக்கு வெவ்வேறு வருமானப் பிரிவுகளில் காணப்பட்டதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.