கொவிட்-19 கிருமித்தொற்று சூழலால் வாழ்க்கைமுறையில் மாற்றம். சிலரது வேலையில் பாதிப்பு. பலரது வாழ்வாதாரத்தில் தடுமாற்றம். இருப்பினும், சவால்களுக்கிடையே தங்களால் முடிந்த அளவுக்கு ஒரு சிறப்பான சூழலை அமைத்துக்கொள்கிறார்கள் சிலர்.
வேலை மாற்றத்தில் ஆறுதல்
பெரும்பாலான ஊழியர்கள் தொடர்ந்து விடுப்பில் இருந்தாலும் ஊழியர்களுக்குத் தேவையான வாழ்வாதார வருமானத்தைக் கிடைக்கச் செய்து வருகிறது 'ஜெட்ஸ்டார் ஏஷியா' நிறுவனம்.
நிறுவனத்தின் விமானச் சிப்பந்திகளும் தங்களின் வருமானம் பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்காலிக வேலைகளைத் தேடிக்கொண்டு, முடிந்த அளவுக்கு அர்த்தமுள்ள வழிகளில் பங்காற்றி வருகிறார்கள்.
கடந்த 30 ஆண்டுகளில் வெவ்வேறு விமான நிறுவனங்களின்கீழ் வேலை பார்த்த 50 வயது பாயல் பந்தாரி, கொவிட்-19 நெருக்கடி ஏற்படும்போது 'ஜெட்ஸ்டார் ஏஷியா' விமானப் பணிப்பெண்ணாக இருந்தார். தற்போது பாதுகாப்பு இடைவெளித் தூதராக மாறியுள்ளார்.
காலை 5.30 மணிக்குத் தம் புதிய வேலையைத் தொடங்கும் இவர், காலை 10 மணிக்கு ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் மாலை யில் வேலைக்குத் திரும்புகிறார்.
"விமானத்தின் உள்ளேயே இருந்து பழகிவிட்டதால், மாறிக்கொள்ள சிரமமாக இருந்தது. வெளிப்புறத்தில் வேலை செய்யும்போது வெப்பம், ஈரப்பதம், மழை போன்ற பருவநிலை மாற்றங்களைச் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் இந்த வேலையில் இன்பம் காணத் தொடங்கியுள்ளேன். வெளிப்புற இயற்கைச் சூழலில் இருக்கும் அதேவேளையில் என்னால் பங்களிக்க முடிகிறது. இங்குமங்கும் நடப்பதால் உடற்பயிற்சியும் செய்ய முடிகிறது. பலர் எங்களிடம் வந்து நன்றியும் கூறுகிறார்கள்," என்றார் திருவாட்டி பாயல்.
அவரைப் போலவே அவரது விமானச் சிப்பந்தி நண்பர்களும் வெவ்வேறு தற்காலிக வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் விமான வேலைக்குத் திரும்புவது குறித்து திருவாட்டி பாயல், "என் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். மீண்டும் விமானப் பயணங்கள் தொடங்க வேண்டும்; பயணிகள் வரவேண்டும்; பயணத்தைத் தொடங்குவதற்காக நான் விமானத்தின் கதவை மூடவேண்டும்," என்றார்.
பிரிவிலும் தாய்மார்கள் ஆறுதல்
வேறு வேலையில் தற்காலிக ஆறுதல் காணும் ஊழியர்கள் ஒரு புறம் இருக்க, தங்களின் குழந்தைகளைப் பிரிந்து வேலை பார்க்கும் தாய்மார்கள் இன்னொரு புறம்.
சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக வேலை செய்யும் தாய்மார்கள் சிலருக்கு கொவிட்-19 நெருக்கடி, பெரும் சோதனைக்காலமாக உள்ளது. குழந்தையைப் பெற்றதோடு சரி, அவர்கள் வளர்வதைப் பார்ப்பதற்குத் திறன்பேசிகள்தான் கைகொடுத்து வருகின்றன.
குடும்பத்தாரைப் பார்ப்பதற்காக மலேசியாவுக்கு வாரத்தில் மூன்று, நான்கு முறை திரும்பும் சிலர், கொவிட்-19 சூழலால் ஏற்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் இங்கேயே பரிதவித்துப் போயுள்ளார்கள்.
தங்களின் குழந்தைகள் வளர்வதை அருகில் இருந்து பார்க்க முடியாத தாய்மார்கள், திறன்பேசிகளில் அக்காட்சிகளைக் கண்டு ரசிக்கின்றனர். ஒரு சில தாய்மார்கள் தளவாடச் சவால்களுக்கிடையே தங்களின் தாய்ப்பாலை உறைந்த வடிவத்தில் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மலேசியாவுக்குச் சென்றவுடன் ஒரு குறிப்பிட்ட வளாகத்தில் 14 நாட்கள் தங்கிய பின்னரே குடும்பத்தாரைப் பார்க்க முடியும். அத்துடன் சிங்கப்பூர் திரும்பியவுடன் மீண்டும் அதே உத்தரவு பிறப்பிக்கப்படும். செலவுகளையும் சிக்கல்களையும் குறைக்க இந்த தாய்மார்கள் தங்களின் பாசத்தை முடிந்தவரை திறன்பேசி மூலமும் தாய்ப்பால் பொட்டலங்கள் மூலமும் அனுப்பி வருகின்றனர்.

