கொவிட்-19 தொற்றுநோய் பரவல் காலத்தில் சிங்கப்பூரர்களுக்கு உதவும் நிவாரண நடவடிக்கைகளில் ஒன்றாக, தாமதமாக செலுத்தும் வீவக வீட்டுக் கடன் தவணைக் கட்டணங்களுக்கான அபராதக் கட்டணம் ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இது மேலும் மூன்று மாதங்களுக்கு செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது தாமதமாக தவணைப் பணத்தைச் செலுத்துவதற்கான அபராதக் கட்டணம், மாத இறுதியில் நிலுவையில் உள்ள தவணைத் தொகையின் அடிப்படையில் ஆண்டு ஒன்றுககுக்கு 7.5% என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமப்படுபவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகின்றன.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, 34,000 வீட்டு உரிமையாளர்கள் தங்கள் கடன், வட்டித் தொகை ஆகியவற்றுக்கான தவணைக் கட்டணத்தை டிசம்பர் வரையில் நிறுத்தி வைக்கக் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் 2,100 பேர் வீட்டு மறுசீரமைப்பு, கல்விக் கடன்களை ஒத்திவைக்குமாறு வங்கிகளைக் கேட்டுள்ளனர்.
இந்த நெருக்கடி காலத்தில் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் வீட்டு உரிமையாளர்களுக்கு உதவ பல்வேறு உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வீவக தெரிவித்தது.
வீவக வீட்டு உரிமையாளர்களுக்கு இவற்றுக்கு அனுமதி வழங்குவது உட்பட, பல உதவிகளை வீவக வழங்குகிறது:
- ஆறு மாத காலத்துக்கு தவணைக் கட்டணம் செலுத்துவதைத் தள்ளி வைப்பது அல்லது குறைப்பது. தேவைப்பட்டால் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பது.
- நிதி நிலைமை மேம்படும் வரை நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்த அனுமதிப்பது.
- தேவைப்பட்டால், மாதத் தவணைகளைக் குறைக்க உதவும் வகையில் அடமானக் கடன் காலத்தை நீட்டிப்பது.
தவணைத் தொகையைச் செலுத்துவதில் உதவி தேவைப்படும் வீவக வீட்டு உரிமையாளர்கள் 1800-225-5432 என்ற எண்ணில், வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வீவகவைத் தொடர்புகொள்ளலாம் அல்லது உதவி, ஆலோசனைகளுக்காக வீவக கிளை அலுவலகங்களில் வீட்டு ஆலோசகர்களைச் சந்திக்கலாம்.

