புதிய தொழில்முனைவர்கள் தங்களின் வர்த்தகத் திட்டங்களைச் செயல்படுத்த அதிகரிக்கப்பட்ட $50,000 முதலீட்டு மானியம் கைகொடுக்கும். முன்னர் இந்தத் தொகை $30,000ஆக இருந்தது.
கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் உள்ளூர் நிறுவனங்களையும் வேலைகளையும் உருவாக்க உள்ளூர் வர்த்தக முயற்சிகளை முடுக்கிவிடும் நோக்கத்தில் மேம்படுத்தப்பட்ட முயற்சிகளில் இதுவும் ஒன்று.
இன்று அறிவிக்கப்பட்ட புதிய நிறுவனங்களுக்கான 'எஸ்ஜி ஃபவுண்டர்' திட்டத்தின் மேம்பாடுகளின் ஒரு பகுதியாக, புத்தாக்கத் திட்டங்களை புதிய நிறுவனங்கள் செயல்படுத்த உதவுவதற்காக மூன்று மாத திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் புத்தாக்கம், தொழிமுனைப்பு கல்விக் கழகமான 'தி கிரீன்ஹவுஸ்' வளாகத்திற்கு நேற்று வருகையளித்த வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோவும் இந்தத் தகவல்களைப் பகிர்ந்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய நிறுவனங்களுக்கான 'எஸ்ஜி ஃபவுண்டர்' திட்டத்தை அரசாங்க அமைப்பான 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' நிர்வகித்துவருகிறது. புத்தாக்கமிக்க திட்டங்களைக் கொண்ட முதல் முறை தொழில்முனைவர்களுக்கு ஆலோசனை வழங்குவதும் ஆரம்பக்கட்ட முதலீட்டு மானியங்களை வழங்குவதும் அதன் நோக்கம்.
மேம்படுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் ஆதார மானியத்துக்கு முந்திய ஆதரவாக, ஒவ்வொரு புதிய தொழிலுக்கும் $20,000 முதல் $50,000 வரை 12 மாத காலத்தில் மானியம் கிடைக்கும். புதிய நிறுவனங்கள் முதலீடு செய்யவேண்டிய இணை நிதியான $10,000 தொகையில் மாற்றமில்லை.
சிங்கப்பூரர்களை மையமாகக் கொண்டு இருக்கவேண்டும் என்பதை மேலும் வலுப்படுத்த புதிய மானியம் பெறவிரும்பும் நிறுவனங்களில் குறைந்தது மூன்று சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் இருக்கவேண்டும். அவர்களில் இருவராவது முதல் முறை தொழிமுனைவர்களாக இருக்கவேண்டும். ஏற்கெனவே இந்த நிபந்தனைக்கு ஒரு சிங்கப்பூரரோ நிரந்தரவாசியோ இருக்கலாம்.

