நீ சூன் வேலைச் சந்தையில் கொவிட்-19 சூழலால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் முயற்சி

நீ சூன் வேலைச் சந்தையில் கொவிட்-19 சூழலால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் முயற்சி

3 mins read
4b5f2db2-97d7-4d73-8f48-9128f7334aca
-

கொவிட்-19 கிருமித் தொற்று சூழலால் சில நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்தாலும் அல்லது புதிய ஊழியர்களைப் பணி அமர்த்தாமல் இருந்தாலும் மற்ற சில நிறுவனங்களுக்கு ஊழியர்கள் தேவைப்படுகின்றன.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் வேலை நியமன, வேலைத்தகுதி கழகத்துடனும் முதலாளிகளுடனும் அரசாங்கம் இணைந்து பணியாற்றி வீடமைப்புப் பேட்டைகளில் வேலைச் சந்தைகளை நடத்தி மக்களுக்கு வேலை கிடைக்க முயற்சி எடுத்துள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

சொங் பாங் சமூக மன்றத்தில் இன்று நடைபெற்ற அத்தகைய நிகழ்ச்சிக்கு வருகைத் தந்தார் அமைச்சர். 160க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் வேலைத் தேடி அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சண்முகம், சிங்கப்பூரர்களுக்கு வேலை இருப்பதை உறுதிசெய்வதே இதன் நோக்கம் என்றார்.

வேலை இல்லாமல் அவர்களையும் பார்த்துக்கொள்ளமுடியாது, அவர்களின் குடும்பத்தினரையும் பார்த்துக்கொள்ள முடியாது என்று அவர் கருத்துரைத்தார்.

விற்பனை உதவியாளர், வர்த்தக ஆய்வாளர், பாதுகாவலர், கடை நிர்வாகி, உற்பத்தி நிபுணர் போன்ற வேலைகளுக்கு கிட்டத்தட்ட 1,600 பேருக்கு வேலை வாய்ப்பு இன்று நடந்த சந்தையில் இருந்தன.

வேலை நியமன, வேலைத்தகுதி கழகம் நீ சூன் குழுத்தொகுதியில் நடத்தவிருக்கும் ஐந்து வேலைச் சந்தையில் இது முதலாவது. வேலை தேடுபவர்களுக்கு ஆலோசனைகளையும் சில உத்தேச முதலாளிகளுடன் உடனே நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டன.

ஏடோஸ் ஹோல்டிங்ஸ், கோல்ட் ஸ்டோரேஜ், சீகேட், ஆல் செயிண்ட்ஸ் ஹோம் போன்ற நிறுவனங்கள் அந்த வேலைச் சந்தையில் இடம்பெற்றன.

அடுத்த சில மாதங்களில் அந்தத் தொகுதியின் வெவ்வேறு இடங்களில் இதர வேலைச் சந்தைகள் நடத்தப்படும்.

கடந்த ஐந்து மாதங்களாக வேலையிழந்துள்ள கோல்டன் மைல் காம்பிளக்ஸில் உள்ள இரவு நடன கேளிக்கைக் கூடத்தின் நிர்வாகி 56 வயது திரு லிம் கிம் ஹுங், இந்த வேலைச் சந்தையில் துப்புரவாளர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

கொரோனா கிருமித் தொற்றை முறியடிக்கும் நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் இரவு கேளிக்கைக் கூடங்களும் டிஸ்கோ நடன கூடங்களும் மூடப்பட்டுள்ளன.

மீண்டும் எப்போது இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரியவில்லை என்றும் அதுவரை வீட்டில் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு பதிலாக இங்கு வந்து வேலைத் தேட நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த 30 வயது ஜான் ஓங், ஒரு மாதத்திற்கு முன்னர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் இதுவரை 30 வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளார் என்றும் சில நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றுள்ள்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அலுவலக உடையில் வேலைச் சந்தைக்கு வந்திருந்த அந்த முன்னாள் கணக்காய்வாளர் கோல்ட் ஸ்டோரேஜ் நிறுவனத்தில் வர்த்தக ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.

பல நிறுவனங்கள் புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்துவதில்லை என்பதால் வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது என்று அவர் கூறினார்.

தற்போது அவரால் சமாளிக்க முடிகிறது என்று கூறிய அவர், மேலும் உத்வேகத்துடன் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று தொடர்ந்து அறிந்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.