புதிய தொழில்களில் 4,600 வேலை வாய்ப்புகள்

புதிய தொழில்களில் 4,600 வேலை வாய்ப்புகள்

2 mins read
f405e538-2c1c-4dc7-b9bb-8374af3da622
-

சிங்கப்பூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட 1,600 தொழில்கள், 4,600க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளையும் 860க்கும் மேற்பட்ட பயிற்சித் திட்டங்களையும் வழங்குகின்றன.

இவை வேலை தேடும் சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக 'எஸ்ஜி ஒற்றுமை' (எஸ்ஜியுனைட்டெட்) வேலைகள், திறன்கள் திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் முதல் இடங்களில் உள்ள வேலைகளாக, மென்பொருள் உருவாக்குநர்கள், சமையல் வல்லுநர்கள், பொறியியல் நிபுணர்கள், விற்பனைத்துறை மேலாளர்கள், விநியோக வர்த்தக மேம்பாட்டு துறையினர், நிர்வாக மற்றும் அதைச் சார்ந்த நிபுணத்துவம் ஆகியவை உள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று தனது மாதாந்திர வேலை வாய்ப்புகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வேலைகளுக்கான மாத சம்பளம் $2,700க்கும் $6,000க்கும் இடைப்பட்டு இருக்கும்.

இவை தவிர, செயலி உருவாக்குநர், சமையல் வல்லுநர், வர்த்தக மேம் பாட்டாளர்கள், மின்னிலக்க தரவு வழங்குநர் ஆகிய வேலைகளும் உள்ளன.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத்திட்டத்தின் ஆதரவினால் 330 பேர் புதிதாகத் தொடங்கப்பட்ட வேலைகளில் இணைந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் புதிய பட்டதாரிகள் கிட்டத்தட்ட 150 பேர் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் புத்தாக்கம், தொழில்முனைப்பு கழகத்தில் இன்று பேசிய மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, புதிதாகத் தொடங்கப்படும் வேலைகளில் சேர்வது குறித்து நிலவும் இரண்டு தவறான கருத்துகள் பற்றிக் குறிப்பிட்டார்.

"புதிதாகத் தொடங்கப்படும் தொழில்கள், சந்தை நிலவரத்துக்கு குறைவான ஊதியத்தை வழங்கும் என்ற தவறான எண்ணம் சிலருக்கு இருக்கலாம். அது உண்மையல்ல," என்று திருமதி ஜோசஃபின் கூறினார். புதிதாகத் தொடங்கப்படும் தொழில்களில் அதிகமானோரைப் பணியமர்த்தும் முதல் ஐந்து வேடங்களில் உள்ள வேலை ஒவ்வொன்றிற்கான சராசரி சம்பளம், அந்தத் தொழில்துறை சார்ந்ததாகவே உள்ளது என்றார் அவர்.

மற்றொரு தவறான கருத்து என்னவென்றால், புதிய தொழில்களில் இளம் தொழில்முனைவர்கள் நிறைந்துள்ளனர் என்பது.

"பொதுவாக, இதில் பல வேலைகள் நுழைவு நிலை வேலைகள். ஆனால், நல்ல அனுபவமுள்ள இடைக்கால வேலை மாறுவோர் புதிதாக தொடங்கப்படும் தொழில்களில் சிறக்க முடியாது என்று அர்த்தமல்ல" என்று திருமதி டியோ கூறினார்.

வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டங்கள் போன்ற தொழில் மாற்றுத் திட்டங்கள் (பிசிபி) தேவையான திறன்களில் பயிற்சி அளிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத்திட்டத்தின் மூலம் புதிதாக தொடங்கப்பட்ட தொழில்களில் இணைந்த 330 பேரில், பாதி பேர் தொழில் மாற்றுத் திட்டங்கள் மூலம் இடைக்காலத்தில் வேலை மாறியவர்கள் என்று திருமதி தியோ கூறினார்.

இந்த வாய்ப்புகளைப் பெற உதவி தேவைப்படுவோர் சிங்கப்பூர் ஊழியரணி (WSG) அல்லது என்டியுசியின் வேலை நியமன, வேலைத்தகுதி கழகத்தை (e2i) நாடலாம் என்றார் அவர்.