லிட்டில் இந்தியாவில் ஒருவரைப் பலவந்தமாக காருக்குள் இழுத்துச் சென்றவர்கள் கைது

லிட்டில் இந்தியாவில் ஒருவரைப் பலவந்தமாக காருக்குள் இழுத்துச் சென்றவர்கள் கைது

2 mins read
8f29f6fe-cea7-467d-9cf3-05e13fb448fd
-

லிட்டில் இந்தியாவில் உள்ள வெர்டன் சாலை அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஃபெராரி கார் ஒட்டுநர் ஒருவரைப் பலவந்தமாக காருக்குள் இழுத்துச் சென்ற குற்றத்துக்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த நான்கு ஆடவர்களும் 31 வயதுக்கும் 33 வயதுக்கும் உட்பட்டவர்கள்.

ஒருவரைப் பலவந்தமாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

வெர்டன் சாலைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய சாலைக்குள் அந்த ஃபெராரி கார் திரும்பியதும் அதற்கு முன்புறத்தில் வெள்ளை கார் ஒன்று வந்து நின்றதாக சீனமொழி நாளிதழ் வான்பாவ் தெரிவித்தது.

அந்த வெள்ளை காரிலிருந்து வெளிவந்த நான்கு ஆடவர்கள் அந்த ஃபெராரி ஓட்டுநரை பலவந்தமாக முட்டிபோட வைத்து தங்கள் காருக்குள் இழுத்துச் சென்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலிசாருக்குத் தகவல் தெரிவிக்க சிறிது நேரத்தில் போலிஸ் அதிகாரிகள் அவ்விடத்தை அடைந்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட அந்த நால்வரையும் விசாரணை மூலம் மத்திய போலிஸ் பிரிவு, குற்றவியல் புலன்விசாரணைத் துறை ஆகியவற்றைச் சேரந்த அதிகாரிகள் அடையாளம் கண்டதாக போலிசார் நேற்று முன்தினம் தெரிவித்தனர். ஒருவரைப் பலவந்தமாகத் தடுத்து வைத்த குற்றத்துக்காக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அந்த நால்வரில் ஒருவரிடமிருந்து அந்த ஃபெராரி ஓட்டுநர், இணையம் மூலம் பணம் பறித்ததாகவும் அந்தப் பணத்தை அவரிடமிருந்து திரும்பப் பெறவே அவரை அவர்கள் வலுக்கட்டாயமாகத் தங்களுடன் கொண்டு சென்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த ஃபெராரி ஓட்டுநர் எப்போது விடுவிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அந்த ஃபெராரி ஓட்டுநர் மீது மோசடிக் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. Carousell இணையத்தளம் மூலம் ஒரு பெண்ணை ஏமாற்றி அவரிடமிருந்து அந்த ஆடவர் $350 பறித்ததாகக் கூறப்படுகிறது.

பிணை வழங்கப்படாத நிலையில், அவர் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகவும் அவருக்கு எதிராக மேலும் ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டலாம்.