வரும் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றம் கூடும்போது அவைத் தலைவராக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜாவும் அவைத் துணைத் தலைவராக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மதும் நியமிக்கப்படவிருக்கின்றனர்.
அமைச்சர் இந்திராணி அவைத் தலைவர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் அமைச்சராவார். அவருக்கு முன்பு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அவைத் தலைவராக இருந்தார்.
நாடாளுமன்ற விவகாரங்களை அவைத் தலைவர் என்கிற முறையில் அமைச்சர் இந்திராணி ஒருங்கிணைத்து நிர்வகிப்பார்.
அவைத் தலைவராக நியமிக்கப்படுவது தமக்கு கிடைத்திருக்கும் கௌரவம் என்று அமைச்சர் இந்திராணி ராஜா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கௌரவத்துடன் அதிகமான பொறுப்பும் அப்பதிவு தமக்குத் தருவதாக குறிப்பிட்ட அமைச்சர் இந்திராணி ராஜா, தமது பணியை செவ்வனே செய்யவிருப்பதாக உறுதி அளித்தார்.
நாடாளுமன்ற நாயகராக திரு டான் சுவான் ஜின் நியமிக்கப்படுவார் என்று இன்று அறிவிக்கப்பட்டது.

