புதிய தொழில்முனைவர்கள் தங்களின் வர்த்தகத் திட்டங்களைச் செயல்படுத்த அதிகரிக்கப்பட்ட $50,000 முதலீட்டு நிதியுதவி கைகொடுக்கும். முன்னர் இந்தத் தொகை $30,000ஆக இருந்தது.
கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் உள்ளூர் நிறுவனங்களையும் வேலைகளையும் உருவாக்க உள்ளூர் வர்த்தக முயற்சிகளை முடுக்கிவிடும் நோக்கத்தில் மேம்படுத்தப்பட்ட முயற்சிகளில் இதுவும் ஒன்று.
நேற்று அறிவிக்கப்பட்ட புதிய நிறுவனங்களுக்கான 'எஸ்ஜி ஃபவுண்டர்' திட்ட மேம்பாடுகளின் ஒரு பகுதியாக, புத்தாக்கத் திட்டங்களை புதிய நிறுவனங்கள் செயல்படுத்த உதவுவதற்காக மூன்று மாத திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் புத்தாக்கம், தொழில்முனைப்பு கல்விக் கழகமான 'தி கிரீன்ஹவுஸ்' வளாகத்திற்கு நேற்று வருகையளித்த வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோவும் இந்தத் தகவல்களைப் பகிர்ந்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய நிறுவனங்களுக்கான 'எஸ்ஜி ஃபவுண்டர்' திட்டத்தை அரசாங்க அமைப்பான 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' நிர்வகித்து வருகிறது. புத்தாக்கமிக்க திட்டங்களைக் கொண்ட புதிதாகத் தொழில்தொடங்குவோருக்கு ஆலோசனை வழங்குவதும் தொடக்க முதலீட்டு நிதியுதவியை வழங்குவதும் அதன் நோக்கம்.
மேம்படுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் ஆதார நிதியுதவிக்கு முந்திய ஆதரவாக, ஒவ்வொரு புதிய தொழிலுக்கும் $20,000 முதல் $50,000 வரை 12 மாத காலத்தில் மானியம் கிடைக்கும். புதிய நிறுவனங்கள் முதலீடு செய்யவேண்டிய இணை நிதியான $10,000 தொகையில் மாற்றமில்லை.
சிங்கப்பூரர்களை மையமாகக் கொண்டு இருக்கவேண்டும் என்பதை மேலும் வலுப்படுத்த இந்த நிதியுதவியைப் பெறவிரும்பும் நிறுவனங்களில், நிறுவனர் உட்பட குறைந்தது மூன்று சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் இருக்கவேண்டும். அவர்களில் இருவராவது முதல் முறை தொழில்முனைவர்களாக இருக்கவேண்டும். முன்னர் ஒரு சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி இருந்தால் போதுமானது.
"சிங்கப்பூர் சந்தைக்கு மட்டுமின்றி, வட்டார, உலகளாவிய சந்தைகளுக்கும் சேவை செய்வதற்காக சிங்கப்பூரிலிருந்து புதிய தலைமுறை நிறுவனங்களை வளர்ப்பதில் அரசாங்கம் உறுதி கொண்டு இருக்கிறது.
"ஒவ்வொரு நெருக்கடி காலத்திலும் புதிய தலைமுறை நிறுவனங்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் எப்போதும் சிங்கப்பூருக்கு இருக்கும். இந்த நெருக்கடி வேறுபட்டதல்ல," என்று குறிப்பிட்டார் திரு சான்.
கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் இந்த முயற்சிகள் தொடங்கப்பட்டன என்றாலும், இந்த நெருக்கடி காலத்தில் புதிய தொழில்களை வளர்க்கவும், புதிய சந்தைகளுக்குள் நுழையவும் இவற்றில் பல திட்டங்களை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
புத்தாக்கம், நடைமுறை உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது ஆகியவற்றுடன் புதிய தொழில்கள் வேலைகளை உருவாக்கவும் உதவுகின்றன. இந்த சிரமமான காலகட்டத்தில் இது முக்கியமானது என்ற திரு சான், புதிய நிறுவனங்களுக்கான 'எஸ்ஜி ஃபவுண்டர்' திட்டத்தின் மூலம் புதிய தொழில்களுக்கான ஆதரவை அதிகரிக்க இது ஒரு காரணம் என்று குறிப்பிட்டார்.
புதிய நிறுவனங்களுக்கான 'எஸ்ஜி ஃபவுண்டர்' திட்டத்தின் மேம்பாடுகளுக்காக ஏற்கெனவே $150 மில்லியன் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கியட் திங்களன்று தனது அமைச்சர்நிலை அறிக்கையில் இதனை அறிவித்தார்.
இந்தப் புதிய தொழில்முனைப்பை வளர்க்கும் திட்டத்தில் பங்கேற்பவர்கள், புத்தாக்கங்களை தேடவும், யோசனைகளை வர்த்தகமாக்குவதற்கும் வாடிக்கையாளரிடமிருந்து பொருட்கள், தீர்வுகளுக்கான சான்றிதழைப் பெறுவதற்கும் முதலீடுகளைத் தேடவும் உதவி பெற முடியும்.
இந்தத் திட்டத்தில் சிங்கப்பூரர்களும் நிரந்தவாசிகளும் சேரலாம். ஒவ்வொரு பங்கேற்பாளரும் மூன்று மாத காலப்பகுதியில் மாதத்திற்கு $1,500 உதவித்தொகையைப் பெறுவர்.
ஐந்து தன்னாட்சி பல்கலைக்கழகங்களான நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை தொழில்முனைப்பை வளர்க்கும் இத்திட்டத்தைத் தொடங்கவுள்ளன. இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெறும்.
தொழில்முனைப்பை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கான பங்காளித்துவத்தில் இடம்பெறுவோர் பட்டியல் காலப்போக்கில் அதிகமாகும். புதிய நிறுவனங்களுக்கான 'எஸ்ஜி ஃபவுண்டர்' திட்டத்தின் கீழ், தற்போது மேம்பட்ட உற்பத்தி உட்பட பல்வேறு தொழில்நுட்ப தொழில்துறைகளைச் சேர்ந்த 50 சான்றிதழ் பெற்ற வழிகாட்டி பங்காளிகள் உள்ளனர்.

