நிர்வாகிகள் 50 பேர் வரை பணியமர்த்த தேசிய சமூக சேவை மன்றம் திட்டம்

2 mins read
84929524-ac4d-4b5e-812e-9e4f6240dfda
கோப்புப்படம் -

சிங்கப்பூரில் உள்ள அறக்கொடை நிறுவனங்களில் தொண்டூழியர்களை நிர்வகிக்க, தேசிய சமூக சேவை மன்றம், சமூக சேவைத் துறைக்கு வெளியே இருந்து நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் என 50 பேர் வரை தனது அமைப்பில் பணியமர்த்த திட்டமிட்டு உள்ளது. சமூக சேவை அமைப்புகள் அவற்றின் தொண்டூழிய நிர்வாக ஆற்றலை வலுப்படுத்த உதவும் முயற்சியின் ஒரு பகுதியாக, $8 மில்லியன் மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட தொண்டூழிய நிர்வாகி நிதித் திட்டம் ஒன்றை தேசிய சமூக சேவை மன்றம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய தேசிய சமூக சேவை மன்றத்தின் ஆலோசகரும் நாடாளுமன்ற நாயகருமான திரு டான் சுவான் ஜின், தொண்டூழிய வளங்களை மேம்படுத்துவதற்கான தேவை இருப்பதாகக் கூறினார்.

குறிப்பாக, கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் நன்கொடை வழங்குவதும் சமூக சேவை அமைப்புகளில் உதவும் தொண்டூழியர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தொண்டூழியத் திட்டங்களை மீண்டும் தொடங்க அர்ப்பணிப்புமிக்க தொண்டூழிய நிர்வாகிகள் இருப்பது முக்கியம் என்றார் திரு டான்.

ஊழியர் பற்றாக்குறை என்பது சமூக சேவை அமைப்புகள் எதிர்நோக்கும் முக்கிய சவால் என்று தேசிய சமூக சேவை மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. 2018ஆம் ஆண்டில் தேசிய சமூக சேவை மன்றம் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் பங்கேற்ற 242 சமூக சேவை அமைப்புகளில் பாதியளவிலான அமைப்புகளில் மட்டும் தொண்டூழியர்களை நிர்வகிக்க ஊழியர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 2016 முதல் 2018ஆம் ஆண்டு வரை நடப்பில் இருந்த முன்னோட்டத் திட்டத்தின்கீழ், 10 சமூக சேவை அமைப்புகளில் தேசிய சமூக சேவை மன்றம் நிர்வாகிகளைப் பணியமர்த்தியது. அது நம்பிக்கையளிக்கும் விதமாக அமைந்தது.

சமூக சேவை அமைப்புகளில் மேலாளர்கள் பணியமர்த்தப்படுவதால் அங்கு தொண்டூழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததை மற்றொரு ஆய்வு முடிவுகள் காட்டின.

மேலாளர்கள் இருப்பதால் தொண்டூழியர்களின் அனுபவம் கூடியதுடன் அவர்கள் திருப்தியும் அடைந்தனர். இதனால் சமூக சேவை அமைப்புகளால் தொண்டூழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது.

கொவிட்-19 சூழலில் தொண்டூழியர்களைக் கையாள்வது குறித்த கவலையைக் குறைக்க, தொண்டூழிய தொடர் திட்டமிடுதல் வழிகாட்டியை தேசிய சமூக சேவை மன்றம் வெளியிட்டது. நெருக்கடி காலத்தில் தொண்டு நடவடிக்கை தொடர்வதைச் சமூக சேவை அமைப்புகள் உறுதி செய்ய இந்த வழிகாட்டி உதவுகிறது.