சிங்கப்பூரில் எவருக்கும் எதிராக எந்த வகையிலும் பாகுபாட்டிற்கு இடமில்லை என்று அதிபர் ஹலிமா யாக்கோப் திட்டவட்டமாகக் கூறி உள்ளார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் வேலையிடத்தில் பாகுபாடு காட்டப்படுவது வேதனை அளிப்பதாகக் கூறிய அவர், வாழ்வாதாரம் குறித்து ஏற்கெனவே கவலைப்படுவோருக்கு இத்தகைய சம்பவங்கள் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்று சொன்னார்.
டேங்ஸ் பகுதிவாரிக் கடையில் உள்ள ஒரு கூடத்தில் கைப்பைகளை விற்பனை செய்யும் மலாய் பெண் ஊழியர் ஒருவரிடம் வேலை செய்யும்போது முக்காடை நீக்குமாறு டேங்ஸ் கடை ஊழியர் கூறிய சம்பவம் குறித்து திருவாட்டி ஹலிமா கருத்துரைத்தார்.
பாசிர் ரிஸ் ஈஸ்ட் சமூக கட்டடத்தில் உள்ள முஸ்லிம் நிபுணர்கள் சங்க அலுவலகத்திற்கு நேற்று சென்ற திருவாட்டி ஹலிமாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அவ்வாறு கூறினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து வேலையில் முக்காடு அணிவதை அனுமதிப்பது குறித்து டேங்ஸ் கடை நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாக திருவாட்டி ஹலிமா தெரிவித்தார்.
ஜூலை 29ஆம் தேதி நுரின் ஜஸ்லினா மெஹ்பூப் எனும் அந்த பகுதி நேர ஊழியருக்கு நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து அவரது முதலாளி இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து அது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
இதற்கிடையே, கொவிட்-19 சூழல் புதிய சவால்களைத் தந்தாலும் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவு கிடைக்கும் என்று அதிபர் ஹலிமா உறுதி கூறினார்.
"குடும்பங்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இன்றைய சூழலில் அவை ஏராளமான சவால்களை எதிர்கொள்கின்றன. நமது சமுதாயம் வேகமாக மாறி வரும் வேளையில் புதிய சவால்கள் ஏற்படுகின்றன.
"அதுவும் கொவிட்-19 நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது. எனவே, குடும்பங்களுக்கு போதுமான உதவி கிடைப்பதை உறுதி செய்வது முக்கியம்," என்றார் அவர்.

