கூகல் சேவையில் தடை

கூகல் சேவையில் தடை

1 mins read
ec84ad66-cfc0-4200-9d40-91b667eb80db
படம்: ஏஎப்பி -

மின்னஞ்சல், ஆவணம், காணொளி உரையாடல் போன்று கூகல் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளுக்கு உலகளவில் தடை ஏற்பட்டது.

ஜிமெயில், டிரைவ், டாக்ஸ், மீட் ஆகிய சேவைகளைப் பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கியதாக சிங்கப்பூரில் உள்ள பயனாளர்கள் உட்பட பலரும் தெரிவித்தனர்.

கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் உலகளவில் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். வேலை செய்வதற்கு பல முக்கிய சேவைகளை கூகல் வழங்குகிறது.

இந்நிலையில், அதன் சேவையில் தடங்கல் ஏற்பட்டிருப்பது பலருக்கும் சிரமம் தந்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஏராளமான பதிவுகள் செய்யப்பட்டன.

ஸ்பிளேஷ் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் கணக்கியல் இயக்குநராக பணியாற்றும் திருமதி டயானா லோ, நேற்று பிற்பகல் 2 மணியிலிருந்து ஜிமெயிலில் கோப்பு இணைப்புகளுடன் மின்னஞ்சல் அனுப்ப முடியவில்லை என்று கூறினார்.

மூன்றாம் தரப்பு இணையக் கண்காணிப்பு நிறுவனமான டவுன்டிடெக்டரை பொறுத்தவரை, நேற்று நண்பகல் வாக்கில் கூகல் சேவையில் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து 1,000க்கும் அதிகமான பயனாளர்களிடமிருந்து டவுன்டிடெக்டர் நிறுவனத்திற்குப் புகார் கிடைத்தது.

ஜப்பான், இந்தியா, அமெரிக்காவின் சில பகுதிகள், ஐரோப்பா, தென்கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றில் கூகல் நிறுவனத்தின் சேவையில் தடை ஏற்பட்டதாக டவுன்டிடெக்டர் நிறுவனம் கண்டறிந்தது.

ஜிமெயில் தொடர்பான பிரச்சினை குறித்து தான் விசாரணை மேற்கொண்டு வருவதாக நேற்று பிற்பகல் 1.29 மணிக்கு கூகல் அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டது.

மீட், டிரைவ் சேவையில் தடை ஏற்பட்டிருப்பது குறித்து தான் விசாரணை நடத்துவதாக பிற்பகல் 3.21 மணிக்கு அந்த நிறுவனம் தெரிவித்தது.