சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல் சட்டவிரோதமாக மலேசிய கடலில் நிறுத்திவைக்கப்பட்டதையடுத்து மலேசிய கடல்துறை அமலாக்க ஆணையம் அக்கப்பலை தடுத்துவைத்துள்ளது.
ஜோகூரின் கிழக்குக் கரையோரப்பகுதியில் தஞ்சோங் சியாங் எனும் பகுதியில் அக்கப்பல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு மிகப் பெரிய கச்சா எண்ணெய்க் கப்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக ஆணையத்தின் தஞ்சோங் செடிலி கடல்துறை இயக்குநர் முகமது ஸுல்ஃபட்லி நயான் கூறியுள்ளார்.
சுமார் 245 மீட்டர் நீளமுள்ள கப்பலை கண்காணிப்புப் பிரிவினர் அணுகியதாகவும் 19 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைபட்ட கப்பலோட்டி, சிப்பந்திகள் உட்பட 22 பேர் அதில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன், சீனா, மியன்மார், ரஷ்யா, ஜோர்ஜியா போன்ற நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு நாட்டினர் அக்கப்பலில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இம்மாதத்தில் சட்டவிரோதமாக நிறுத்திவைக்கப்பட்ட நான்காவது கப்பல் இது என்று தெரிவித்த அவர், மலேசிய கடற்பகுதியில் கப்பலை நிறுத்திவைக்க கடல்துறையிடம் கப்பல்கள் அனுமதி கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவம் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டுவருவதாகத் தெரிவித்த அவர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச அபராதமாக 100,000 ரிங்கிட் ($32,762) அல்லது இரண்டு ஆண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என்றார்.

