சமூகத்தில் அறுவர் உட்பட புதிதாக 117 பேருக்கு கிருமித்தொற்று

சமூகத்தில் அறுவர் உட்பட புதிதாக 117 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
a18c71f9-0090-4d9b-b2c3-4f4247538567
-

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 117 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களைச் சேர்த்து இங்கு கிருமித்தொற்று ஆளானோரின் எண்ணிக்கை 56,216க்கு உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் அறுவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். மற்ற மூவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்றும் அமைச்சு கூறியது.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

எஞ்சியுள்ளவர்களில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 11ஆம் தேதியோடு தங்கும் விடுதிகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கொவிட்-19 பரிசோதனை முடிவடைந்து விட்டது. அதன் மூலம் 14,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

"அவர்களின் தனிமைப்படுத்துதல் முடிவடையும்போது அவர்கள் அனைவரும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்," என்றும் அமைச்சு விவரித்தது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 68 பேரில் இருவர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள்.

அவர்களில் ஒருவர் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதிக்குள்ளாக வந்து சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசி.

அவர்களிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறி முதலில் தென்படவில்லை. ஆனால் கடந்த புதன்கிழமை கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு கூறியது.