கொவிட்-19 சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செப்டம்பர் 14 முதல் டிசம்பர் 2 வரை பிஎஸ்எல்இ, என் நிலை, ஓ நிலை மற்றும் ஏ நிலை ஆகிய நான்கு தேசிய தேர்வுகளும் செப்டம்பர் 14 முதல் டிசம்பர் 2 வரை திட்டமிட்டபடி நடத்தப்படும்.
இருந்தாலும் கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து மாணவர்களுக்கும் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் இடம்பெறும்.
கிருமி தொற்றி உள்ள, தடுத்து வைக்கப்பட்டு உள்ள அல்லது வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மற்றும் மதிப்பீட்டுக் கழகமும் தெரிவித்தன.
இத்தகைய நிலையில் உள்ள மாணவர்களுக்கு அவரவர் அடிப்படையில் விதிவிலக்கும் உண்டு. இந்த மாணவர்கள் தேர்வுக் கழகம் நிர்வகித்து நடத்தும் மையமான ஓர் இடத்தில் தனித்தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத வேண்டி இருக்கும்.
இவர்களுக்காக தனி கழிவறைகள் ஒதுக்கப்படும்.
ஒவ்வொரு தேர்வு அறையின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் தனித்தனி வழிகள் இருக்கும்.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாது என்பதால் இத்தகைய மாணவர்கள் சொந்த வாகனத்தில் அல்லது டாக்சியில் தேர்வு இடத்திற்குச் செல்ல வேண்டும். கிருமி தொற்றியோருடன் தொடர்புகொண்டதன் காரணமாக விடுப்பில் உள்ள மாணவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதி இராது.
இவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதியான பிறகுதான் தேர்வு எழுத முடியும். இவர்களுக்கு நடத்தப்படும் பரிசோதனைகளுக்கு ஆகும் செலவை அரசாங்கம் ஏற்கும்.
மருத்துவ விடுப்பில் இருக்கும் சுவாசக் கோளாறு உள்ள மாணவர்கள் கிருமித்தொற்று இல்லாத பட்சத்தில், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு எழுத தவறும் மாணவர்கள், அதற்கான சரியான காரணங்களைத் தெரியப்படுத்தினால் சிறப்பு பரிசீலனைக்கு இடம் உண்டு. இந்த ஆண்டில் ஏறக்குறைய 98,000 மாணவர்கள் இந்த நான்கு தேர்வையும் எழுதுவர்.
தேர்வுகள் நடக்கும்போது பள்ளி களிலும் தேர்வு இடங்களிலும் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். தேர்வு ஏற்பாடுகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அது பற்றி தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று இந்த அமைப்புகள் குறிப்பிட்டு இருக்கின்றன.

