கடற்கரையிலும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியமானது என்பதை தேசிய சுற்றுப்புற வாரியம் வலியுறுத்தி உள்ளது.
கடற்கரைக்குச் செல்பவர்கள் அப்போதைக்கு அப்போது தங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். உடலில் காயம் இருந்தால் நீந்தக் கூடாது. கடல் நீரில் இருந்து கரையேறியதும் அவர்கள் நன்னீரில் குளிக்க வேண்டும் என்று மக்களுக்கு வாரியம் ஆலோசனை கூறி இருக்கிறது.
செந்தோசாவில் இருக்கும் இரண்டு கடற்கரைகளுக்குத் தனித்தனியாகச் சென்று வந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பேருக்குத் தோல் எரிச்சல் ஏற்பட்டதை அடுத்து வாரியம் இந்த ஆலோசனையை வழங்கி உள்ளது.
பொதுவாக சுற்றுப்புறத்திலும் சிலரின் தோலிலும் நாசியிலும் காணப்படும் கெடுதல் செய்யாத பாக்டீரியா கிருமிகளே அந்த நால்வர் உடலில் சில இடங்களில் தோலில் எரிச்சலை ஏற்படுத்தி தடிப்புகளை உருவாக்கிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான திருவாட்டி எலிசி, 37, என்பவர் சிவந்த இடத்தில் சேர்ந்த சீழை வெளியேற்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அவர் செந்தோசாவில் உள்ள தஞ்சோங் கடற்கரைக்குச் சென்ற மாதம் சென்று வந்தார். அந்த மாதின் கணவரின் கைவிரலில் தோல் சிவந்து வீக்கம் ஏற்பட்டு சீழ் உருவானது. இத்தம்பதியரின் 14 வயது புதல்விக்கும் பாதிப்பு இருந்தது.
இந்த மாது வீட்டுக்கு அருகே வசிக்கும் ஐந்து வயது சிறுவனின் உடலில் முழங்காலுக்குக் கீழே $1 நாணயம் அளவுக்கு எரிச்சலால் தோல் சிவந்து காயம் உருவாகி இருந்தது என்பது சில வாரங்களுக்குப் பிறகு இந்த மாதுக்கு தெரியவந்தது. அந்தச் சிறுவன் செந்தோசாவில் இருக்கும் பஹ்லவான் கடற்கரைக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்று வந்தான்.
தோல் தொற்றுகளை எவ்வாறு தவிர்த்துக் கொள்வது என்பது பற்றி வாரியம் பல அறிவுரைகளைத் தெரிவித்துள்ளது.
நல்ல, சுத்தமான பழக்கவழக்கத்தைக் கடைப்பிடியுங்கள், உடலில் வெட்டுக் காயம், சிராய்ப்புகள் இருந்தால் சோப்பு அல்லது கிருமிநாசினி மருந்தால் சுத்தப்படுத்துங்கள். தேவை எனில் மருத்துவரைச் சென்று பாருங்கள்.
மற்றவர் பயன்படுத்தும் துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தாதீர். உடலில் காயம் அல்லது புண் இருந்தால் கடலில் இறங்காதீர் போன்ற வற்றை வாரியம் குறிப்பிட்டுள்ளது.

