'சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை'

'சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை'

1 mins read
566bb152-fb0e-4085-90c1-04ddeca0654e
பொதுச் சுகாதாரத் தரத்தை மேம்படுத்த எந்தெந்த வகையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்பது குறித்தும் தமது அமைச்சு ஆராயும் என்று சொன்னார் அமைச்சர் கிரேஸ் ஃபூ. படம்: எஸ்டி, ஜின் தே -

சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்பது அடுத்த சில மாதங்களில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் முன்னுரிமையாக இருக்கும் என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.

அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் இதுகுறித்த புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

டெங்கிக்கும் கொரோனா கிருமித்தொற்றுக்கும் எதிரான சிங்கப்பூரின் போராட்டம், பொதுச் சுகாதாரம், நோய்க் கட்டுப்பாடு, சுத்தமான கழிப்பிடம், தரமான நீர், பாதுகாப்பான உணவு போன்ற அம்சங்களின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.

"இவையெல்லாம் வாழ்க்கையின் முக்கியமான அடிப்படைத் தேவைகள் என்பதால் நாம் அவற்றை இலேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நான் அதற்கான முயற்சியை எடுக்க விரும்புகிறேன்," என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சராகப் பொறுப்பேற்றபின் கலந்துகொள்ளும் முதல் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.

சுற்றுப்புற பொதுச் சுகாதார சட்டத்தில் இயற்றப்படும் மாற்றங்களில் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்று அமைச்சர் ஃபூ கூறினார். குறிப்பாக பாலர் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை மையமாகக் கொண்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

பொதுச் சுகாதாரத் தரத்தை மேம்படுத்த எந்தெந்த வகையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்பது குறித்தும் தமது அமைச்சு ஆராயும் என்று சொன்னார் அமைச்சர் ஃபூ.