திருமணமான 18 மாதங்களில் தன் மீது கணவர் ஒருபோதும் கோபப்படவில்லை எனவும் தன்னுடன் சண்டை எதுவும் போடுவதில்லை எனவும் குறிப்பிட்டு, அதனால் சலிப்புத்தட்டி, விவாகரத்து கோரியுள்ளார் உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண்.
நீதிமன்றத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ள இந்த வழக்கு, சம்பலில் உள்ள ஷரியா நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
தமக்காகச் சமைப்பதுடன், வீட்டு வேலைகளிலும் கணவர் உதவிகரமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அந்தப் பெண், "அத்தகைய சூழல் மூச்சுமுட்டுவதாக," இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
"நான் தவறுசெய்தாலும் அவர் மன்னித்து விடுகிறார். ஆனால், நான் அவருடன் வாக்குவாதம்செய்ய விரும்புகிறேன்," என்று குறிப்பிடும் அந்தப் பெண், எல்லாவற்றுக்கும் தலையாட்டும் கணவனுடன் வாழ விரும்பவில்லை என்கிறார்.
இந்த விசித்திரமான காரணத்தைக் கேட்டு, விவாகரத்து வழங்க ஷரியா நீதிமன்றம் மறுத்ததையடுத்து, உள்ளூர் பஞ்சாயத்தின் உதவியை நாடினார் அந்தப் பெண்.
காரணத்தைக் கேட்டு மிரண்டுபோன பஞ்சாயத்தாரும் இதன் தொடர்பில் எந்த முடிவும் எடுக்காத நிலையில், "நான் எதுவும் தவறு செய்யவில்லை. உத்தமமான கணவனாக இருக்க விரும்பினேன்," என்கிறார் கணவர்.
இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மனைவிக்கு அறிவுறுத்துமாறு ஷரியா நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் அந்த பாசக்கார கணவன்.
தம்பதிகளே தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென ஷரியா நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

