கட்டட வடிவமைப்பில் புத்தாக்கத்தைப் புகுத்தி வெற்றி கண்ட நான்கு பொறியாளர்கள் இவ்வாண்டின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
கட்டட கட்டுமான ஆணையத்தின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் பாதுகாப்பு விருது பெறவிருப்போரின் பெயர்களை நேற்று கட்டட கட்டுமான ஆணையம் வெளியிட்டது.
நிபுணத்துவ பொறியாளர்களும் அவர்களின் குழுக்களும் சவால்மிக்க கட்டுமானத் திட்டங்களில் செயல்படுத்தும் புத்தாக்க வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறன்களை அங்கீகரிக்க இவ்விருது வழங்கப்படுகிறது.
இவ்வாண்டுக்கான விருது பெறுவோரில் கேடிபி கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆரன் ஃபூங், 40, என்பவரும் ஒருவர். இரு கட்டடங்களை இணைத்து மேம்பாலம் கட்டுவதில் புத்தாக்கத் திறனுடன் அவர் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாலையின் எதிர் எதிரே இருக்கும் இரு கட்டடங்களை இணைக்கும் பாலம் பார்ப்பதற்கு சுலபமாகத் தெரிந்தபோதிலும் அதனை எழுப்ப பெருமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.
முன்னர் 'ரெட் டாட் டிராஃபிக் பில்டிங்' என்று அழைக்கப்பட்ட மேக்ஸ்வெல் சேம்பர்ஸ் சுவிட்ஸ் கட்டடத்தையும் மேக்ஸ்வெல் சேம்பர்ஸ் கட்டடத்தையும் இணைக்கும் பாலத்தை திரு ஃபூங் தலைமையிலான குழு கட்டி முடித்திருக்கிறது.
சாலையின் குறுக்கே 20 மீட்டர் நீளத்துக்குக் கட்டப்பட்ட பாலத்திற்காக அதன் கட்டுமானத்திலும் வடிவமைப்பிலும் அவரது குழு கடின முயற்சிகளைக் கையாண்டது.
மேலும், மேக்ஸ்வெல் சேம்பர்ஸ் கட்டடத்தைத் தாங்கி நிற்கும் தூண்களுக்கு வலுசேர்க்கும் மெல்லிய தூண்களை உருவாக்கியது இவரது புத்தாக்கத்தின் எடுத்துக்காட்டு.
வீதியின் மட்டத்தில் இடையூற்றைக் குறைக்கும் வகையில் கட்டடத்தின் உள்ளேயிருந்து அந்த மெல்லிய தூண்களை அவர் எழுப்பி இருந்தார்.
பாலத்துடன் இணைந்திருக்கும் இரு கட்டடங்களுக்கும் பாதுகாப்பு அந்தஸ்தை கடந்த 2007ஆம் ஆண்டு நகர மறுசீரமைப்பு ஆணையம் வழங்கி இருந்தது.
கட்டட இணைப்புப் பாலம் தொடர்பான கட்டுமானத் திட்டம் ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கப்பட்டாலும் பாலத்தைப் பொருத்தும் வேலை ஒரே இரவில் நடைபெற்றது.
போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படா வண்ணம் நேர்த்தியாக இரவு நேரத்தில் அந்த வேலை நடைபெற்று முடிந்தது.
குறைந்த அளவு இடையூறுகளுடன் விரைவாக உருவாக்கப்பட்ட திறன்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு கட்டுமானத் திட்டம் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் கனெக்ஷன்.
அடித்தூண் அமைத்து பெரிய அளவில் இடையூறுகள் இன்றி முழுக் கட்டுமானத் திட்டமும் 15 மாதங்களில் முடிக்கப்பட்டது. இந்தச் சவால்மிக்க பணியை மெயின்ஹார்ட் சிங்கப்பூர் நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குநர் காம் மன் வாய், 53, கையாண்டார்.

