மற்ற நாடுகளுடன் சிங்கப்பூர் கையெழுத்திட்டுள்ள இருதரப்பு உடன்பாடுகள், சிங்கப்பூரர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பாதிக்கவில்லை என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். உண்மையைச் சொல்லப் போனால், அவை சிறந்த வேலைகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருப்பதாக அவர் சொன்னார்.
தடையற்ற வர்த்தக உடன்பாடுகள் அல்லது முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள், சிங்கப்பூரர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பறித்து வெளிநாட்டவர்களிடம் வழங்குவதாகக் கூறும் விமர்சனங்களுக்குப் பதிலடி தந்த திரு ஹெங், "அத்தகைய கருத்துகள் முற்றிலும் தவறானவை என்று கூறினார்.
"சொல்லப் போனால், சிங்கப்பூரர்களுக்கு சிறந்த வேலைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்," என்றார் அவர்.
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை இங்கு ஈர்க்க இத்தகைய உடன்பாடுகள் உதவ முடியும் என்று சொன்ன அவர், அதன் மூலம் சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய அங்கு நியாயமான முறையில் நடத்தப்பட வழிவகுப்பதாகக் கூறினார். இதன் விளைவாக இங்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக அவர் சொன்னார்.

