ஒளிபரப்பு மூலம் திட்டங்கள் அறிவிப்பு முறித்து விளக்கமளித்த அமைச்சர் இந்திராணி

1 mins read
6ff895b7-145a-4c3d-bede-6a8739424c16
-

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் எடுத்துரைக்கவே கூடுதல் கொவிட்-19 ஆதரவுத் திட்டங்கள் அண்மையில் ஒளிபரப்பு மூலம் அறிவிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா விளக்கமளித்துள்ளார்.

கொவிட்-19 ஆதரவுத் திட்டங்கள் நாடாளுமன்றத்தில் கூர்ந்து ஆராயப்படும் என்றும் அரசாங்கம் இந்தத் திட்டங்களுக்குப் பொறுப்பேற்கும் என்றும் அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.

கூடுதல் கொவிட்-19 ஆதரவுத் திட்டங்கள் குறித்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வெளியிட்ட அமைச்சர்நிலை அறிக்கை கடந்த வாரம் திங்கட்கிழமை ஒளிபரப்பப்பட்டது. $8 பில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக வேலை ஆதரவுத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அது இந்த மாதம் முடிவடைய இருந்தது.

ஆதரவுத் திட்டங்கள் குறித்து முன்கூட்டியே அறிவிப்பதன் மூலம் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு அத்திட்டங்களின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் போதிய கால அவகாசம் வழங்க முடியும் என்று அமைச்சர் இந்திராணி விவரித்தார்.

நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக கூடும்போது அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடுவதற்கு வாய்ப்பு இருக்காது. ஏனெனில், மன்ற நாயகரின் தேர்வு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு, அதிபரின் உரை ஆகிய நிகழ்வுகளுக்குப் போதிய நேரம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.