மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான 'ஸ்கூட்', தனது விமானங்களில் ஒன்றை இனி சரக்குகளை மட்டும் கையாளும் விமானமாக மாற்றியமைத்து இருக்கிறது.
அந்த ஏ-320சிஇஓ வகை விமானத்தில் இருந்து அனைத்து இருக்கைகளும் அகற்றப்பட்டு விட்டன. இதையடுத்து, அந்த விமானத்தின் சரக்குக் கொள்திறன் இரட்டிப்பானது.
அதாவது, அவ்விமானத்தால் இனி ஏறக்குறைய 20 டன் சரக்குகளைக் கையாள முடியும்.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த், சீனாவின் ஹாங்ஸோ உள்ளிட்ட பத்து நகரங்களுக்கு 200க்கும் அதிகமான சரக்கு விமானங்களை 'ஸ்கூட்' இயக்கி வருகிறது.
இருப்பினும், அந்நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று முழுக்கவும் சரக்கு விமானமாக மாற்றப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

