கொவிட்-19 நெருக்கடி அறிவிக்கப்பட்ட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சேட்ஸ் நிறுவனம் $43.7 மில்லியன் நிகர இழப்பைச் சந்தித்து இருக்கிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் சேட்ஸ் நிறுவனம் வரிக்குப் பிந்திய லாபமாக $54.7 மில்லியனை ஈட்டியது.
இந்நிலையில், குழுமத்தின் செலவினங்கள் குறைந்தபோதும் அதை விட வருமான இழப்பு அதிகமாக இருந்ததாக அந்நிறுவனம் கூறியது. சென்ற ஆண்டைக் காட்டிலும் வருமானம் பாதியாகக் குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சரக்கு, பயணிகள் விமானப் போக்குவரத்து குறைந்தது குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாக சேட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டது.
ஓராண்டுக்கு முன் ஒரு பங்கின் மூலம் 4.9 காசு வருமானம் கிடைத்த நிலையில், இந்நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு பங்குக்கு 3.9 காசு இழப்பு பதிவாகியுள்ளது.
2019 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் $465.1 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்ட நிலையில், இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் வருமானம் 54% , அதாவது $209.4 மில்லியனாகக் குறைந்தது.
அதேபோல, குழுமத்தின் செலவினங்களும் 39.9% குறைந்து, $245.4 மில்லியனாகப் பதிவானது. குறிப்பாக, பணியாளர்களுக்கான செலவு 58.7% குறைந்தது, $96.5 மில்லியனுக்கு இறங்கியது.
அரசாங்க மானியங்கள், குறைவான ஒப்பந்தச் சேவைகள், ஊழியர் எண்ணிக்கை குறைப்பு போன்ற காரணங்களால் பணியாளர்களுக்கான செலவும் குறைந்தது.
விமானத் துறை சேவைகள் மூலம் வருவாய் குறைந்ததை அடுத்து உரிமக் கட்டணங்களும் குறைந்தன.
முதல் காலாண்டில் ஈவுத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. மார்ச் 31 வரை மற்றும் செப்டம்பர் 30 வரை என அரையாண்டு அடிப்படையில் சேட்ஸ் நிறுவனம் ஈவுத்தொகை வழங்கி வருகிறது.

