உலகிலேயே முதன்முறையாக நீர்ப்பரப்பின் மேல் 'ஆப்பிள்'

உலகிலேயே முதன்முறையாக நீர்ப்பரப்பின் மேல் 'ஆப்பிள்'

2 mins read
6285ea0c-01d1-41f7-a9fb-95f2fa71e525
-

உலகிலேயே முதன்முறையாக சிங்கப்பூரில் நீர்ப்பரப்பின் மீது தனது விற்பனை நிலையத்தை ஆப்பிள் நிறுவனம் திறக்கவிருக்கிறது.

மரினா பே சேண்ட்ஸில் நீரப்பரப்பின் மேலே குவிமாடம் (Dome) போன்ற வடிவமைப்பில் அந்த விற்பனை நிலையம் அமையவிருக்கிறது. அது விரைவில் திறக்கப்படும் எனக் கூறிய ஆப்பிள் நிறுவனம், ஆயினும் தேதியைக் குறிப்பிடவில்லை.

இது சிங்கப்பூரில் ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாவது விற்பனை நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

"உலகம் முழுவதுமுள்ள மற்ற எல்லா ஆப்பிள் விற்பனை நிலையங்களைப் போலவே, சிங்கப்பூரின் புகழ்வாய்ந்த பகுதியான மரினா பே சேண்ட்சில் அமையும் விற்பனை நிலையமும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவை ஆற்றும், " என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

மரினா பே சேண்ட்ஸ் ஜுவெல் சாங்கி விமான நிலையத்திலும் ஆப்பிள் நிறுவனம் இரு கடைகளைத் திறக்கவிருப்பதாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

'ஆப்பிள் ஜுவெல்' கடை கடந்த ஆண்டு ஜூலையில் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது. தென்கிழக்காசியாவிலேயே முதன்முறையாக, 2017ஆம் ஆண்டில் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜ் கடைத்தொகுதியில் ஆப்பிள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூர் வந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிக் குக், ஆர்ச்சர்ட் சாலை கடையில் விற்பனை நன்றாக இருந்ததால் சிங்கப்பூரில் மூன்றாவது கடையைத் திறக்கலாம் எனக் கூறியிருந்தார்.

கொவிட்-19 நெருக்கடி காரணமாக சில்லறை விற்பனை, சுற்றுப் பயணத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில கடைகளில் மட்டும் விற்பனை நன்றாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

2019 ஜூன் மாதத்தை ஒப்புநோக்க, இவ்வாண்டு ஜூனில் சில்லறை விற்பனை 27.8% குறைந்தது. அதேபோல, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 1.6 மில்லியன் சுற்றுப்பயணிகள் இங்கு வருகை புரிந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 2,200 மட்டுமே வந்தனர்.

இப்போதைய கொரோனா தொற்று போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் ஒரு பெரிய நிறுவனத்தின் கடை திறப்பு இடம்பெறுவது வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் 'சந்தைப்படுத்தல் கல்வி' இணைப் பேராசிரியர் டாக்டர் சேஷன் ராமசாமி குறிப்பிட்டார்.

"இப்போதைக்கு, இந்தப் புதிய கடை அதிகப்படியான தேவையை உருவாக்க வாய்ப்பில்லை," என்றார் திரு சேஷன்.

இருந்தபோதும், சிங்கப்பூரில் சுற்றுப்பயணத்திற்கான தேவை முடங்கிப் போயுள்ள நிலையில் புதிய கடையின் வாயிலாக ஆப்பிள் நிறுவனம் அதைச் சாதகமாக்கிக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.