சமூக ஊடகம் வழியாக பேருந்து ஓட்டுநர்களுக்குப் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
அதே வேளையில், பேருந்து ஓட்டுநர்களைப் பழிக்கும் பயணிகளுக்கும் அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
"கொவிட்-19 நெருக்கடி காரணமான நிச்சயமில்லாச் சூழலில் நாம் வாழ்ந்து வரலாம். அதற்காக, தங்களது கடமைகளை ஆற்றி வரும் சக மனிதர்களை உடல்ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ துன்புறுத்துவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது," என்று தமது ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் திரு ஓங் பதிவிட்டுள்ளார்.
"கனிவுடைமையே பரிவுமிக்க ஒரு சமுதாயத்தின் அடித்தளமாக விளங்குகிறது. நமது பேருந்து ஓட்டுநர்களிடத்திலும் நாம் கனிவுடன் நடந்துகொள்வோம்," என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பேருந்து ஓட்டுநர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்குத் தங்களது பணியைத் தொடங்குவதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டுள்ளார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பள்ளிக்கு, பணிக்கு, சந்தைக்கு, பிற இடங்களுக்குக் குறித்த நேரத்திலும் பாதுகாப்பாகவும் செல்ல பேருந்து ஓட்டுநர்கள் செவ்வனே கடமையாற்றி வருவதாக அவர் சொன்னார்.
அண்மையில், கழுத்தில் உறை அணிந்திருந்த பயணி ஒருவர், தம்மை முகக்கவசம் அணியச் சொன்ன ஓட்டுநரை வாய்மொழியால் பழித்த சம்பவம் குறித்த காணொளி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது.
சக பயணி ஒருவர் முகக்கவசம் வழங்க முன்வந்தபோதும் அதை அந்தப் பயணி ஏற்க மறுத்ததையும் அந்த 15 நிமிட காணொளி காட்டியது.
கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில் நிக்கோல் ஹைவே வழியாக அப்பேருந்து சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.

