தமது வீட்டிற்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுத்த 26 வயது ஆடவரைத் தாக்கி காயப்படுத்தியது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் ரயன் சேவியர் டே சீட் சோங் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டேயின் தாயின் கணவர் அவருக்கு உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
திரு ஷோன் இக்னேஷியஸ் ரோட்ரிகுவேஸ் தங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பதாக டேயின் குடும்பம் போலிசாரிடம் 56 முறை புகார் செய்திருந்தனர்.
2015ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் திரு ரோட்ரிகுவேசை டேயும் அவரது தாயின் கணவரான 58 வயது லாரன்ஸ் லிம் பெக் பெங்கும் எட்டு முறை தாக்கினர்.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதியன்று திரு ரோட்ரிகுவேசை டே தாக்கியதில் படுகாயம் அடைந்து அவர் மரணம் அடைந்தார். இறப்பதற்கு முன்பு, மனநல சிகிச்சை நிலையத்தில் திரு ரோட்ரிகுவேஸ் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
திரு ரோட்ரிகுவேசை 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதியன்று மனநலக் கழகத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர் சுசன் சக்காரியா மதிப்பீடு செய்தார்.
ஆனால் இரண்டு நாட்கள் கழித்து டே தாக்கியதில் திரு ரோட்ரிகுவேஸ் மரணமடைந்தார். அவருக்குக் குறிப்பாக எத்தகைய மனநலப் பிரச்சினை இருந்தது என்பது உறுதி செய்யப்படுவதற்குள் அவர் மாண்டார்.
இந்த வழக்கு தொடர்பில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும்.
வேண்டுமென்றே படுகாயம் விளைவித்த குற்றத்துக்காக டேவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம். லிம்முக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.

