அமைச்சுகளின் செயல்திட்டத்தில் சமுதாய முன்னேற்றம், பயிற்சி வாய்ப்புகள்

அமைச்சுகளின் செயல்திட்டத்தில் சமுதாய முன்னேற்றம், பயிற்சி வாய்ப்புகள்

2 mins read
f2e0b3c3-bfae-417f-b211-d3fdf5bc7dc2
கோப்புப்படம்: எஸ்டி -

கொவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்படும் சிங்கப்பூரர்கள் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஆதரவை தொடர்ந்து பெறுவார்கள்.

கொவிட்-19 சிரமத்திலும் அதன் தொடர்ச்சியான பொருளியல் தாக்கத்திலும் ஒரு சிங்கப்பூரரும் பின்தங்கிவிடாமல் உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கான சமூக பாதுகாப்பை அமைச்சு மறுஆய்வு செய்து வலுப்படுத்தும்.

இந்தத் தகவல்களை சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று அதிபர் உரைக்கான தமது அமைச்சின் பிற்சேர்க்கையில் குறிப்பிட்டார்.

நெருக்கடியைச் சமாளிக்கவும் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்யவும் தமது அமைச்சின் செயல் திட்டங்களில் ஏராளமான அம்சங்கள் அடங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனநலத்திற்கும் குடும்பநலத்திற்குமான ஆதரவு மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இப்போதிருக்கும் நெருக்கடி சமூக முன்னேற்றத்திற்கான நமது முயற்சிகளை திசைதிருப்பி விடாது என்று தெரிவித்த திரு மசகோஸ், சிங்கப்பூரர்கள் பயிற்சி பெறவும் வேலைகளைத் தேடுவதில் உதவி புரியவும் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய வேலை மன்றத்தின் செயல்பாடுகளோடு தமது அமைச்சின் முயற்சிகளும் ஒருங்கிணைக்கப்படும் என்றார்.

"ஆதரவு தேவைப்படுவோரை துடிப்புடன் நாடும் குழுக்களை உருவாக்கும் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

"வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்குச் சேவையாற்றக்கூடிய எஸ்ஜி சமூக பராமரிப்பு கட்டமைப்பு மற்றும் சமூகத் தொடர்பு நடவடிக்கையும் இதில் அடங்கும்.

"கொள்ளைநோய் தாக்கத்தின் பாதிப்பிலிருந்து மீள குறைவான வாய்ப்புகளைப் பெற்றுள்ளவர்கள் சமூகத்தில் உள்ளனர். அவ்வாறு எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்

களுக்கான சவால்களை கொவிட்-19 கொள்ளைநோய் அதிகப்படுத்தி உள்ளதால் இதுபோன்ற சமூக பராமரிப்பு நடவடிக்கைகள் அவசியம்," என்று தெரிவித்த அமைச்சர் மசகோஸ், அந்நடவடிக்கைகள் சிலவற்றைப் பட்டியலிட்டார்.

அதிபர் உரைக்கான பிற்சேர்க்கையை கல்வி அமைச்சும் நேற்று வெளியிட்டது.

"வசதி குறைந்தோர் மீது கொவிட்-19 கொள்ளைநோய் அளவுக்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதால் எந்த ஒரு குழந்தையும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கில் முயற்சிகளை அதிகரித்து வருகிறோம்," என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தமது அமைச்சுக்கான பிற்சேர்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக முன்னேற்றத்தை நிலைநாட்டவும் பலப்படுத்தவும் கல்வியே சிறந்த வழிமுறை என்னும் நிலை தொடருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் மேம்பாட்டு நடவடிக்கையின் கீழ், வசதி குறைந்த குடும்பங்களின் மாணவர்களை கைதூக்கிவிட பள்ளிகளும் சமூகமும் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன.

மாணவர்களுக்கான உதவிகளை அதிகரிக்கும் நோக்கில் இந்தப் பங்காளித்துவம் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.