நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் (என்டியு) சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதன் கொவிட்-19 நிவாரணத் திட்டத்திலிருந்து $1.5 மில்லியன் மதிப்பிலான நிதியுதவியைப் பெற்றுக்கொண்டதாக என்டியு நேற்று அறிவித்தது.
கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலால் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாணவர்களுக்கு உடனடி உதவி வழங்க கடந்த ஏப்ரல் மாதம் இந்த நிவாரணத் திட்டம் தொடங்கப்பட்டது.
தனிநபர் மாத குடும்ப வருமானமாக $690க்கும் குறைவான தொகையைப் பெறும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று என்டியு முன்னதாக கூறியிருந்தது.
அவசரகால சூழ்நிலையை எதிர்நோக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் $500க்கும் $3,000க்கும் இடைப்பட்ட உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக என்டியு தெரிவித்தது.
இந்த நிவாரணத் திட்டத்திற்கு நிதி பெற, பொதுமக்கள் நிதி மற்றும் பல்கலைக்கழக வளங்களைப் பயன்படுத்துவதற்கு மேலாக நன்கொடைகளை ஈர்க்க புதிய திட்டங்களையும் என்டியு தொடங்கியது.
அத்திட்டங்களின் ஒன்று 'என்டியு முன்னுரிமை நிதி'. என்டியு தலைவர் பேராசிரியர் சுப்ரா சுரேஷ் மற்றும் அவரது மனைவி மேரி சுரேஷ் தனிப்பட்ட முறையில் அந்த நிதிக்கு $100,000 வழங்கினர்.
அதே ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த முன்னுரிமை நிதிக்கு 1,300 பேர் நன்கொடை வழங்கியுள்ளனர். அதன் மொத்த மதிப்பு $1.5 மில்லியன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டியு ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் போன்ற தரப்பினருடன் லீ அறநிறுவனம், ஜிஐசி பிரைவெட் லிமிட்டெட், நீ ஆன் கொங்சி முதலிய அமைப்புகளும் இந்த நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளன.
அரசாங்கத்திடமிருந்து வெள்ளிக்கு வெள்ளி நிகராக $1.5 மில்லியனைப் பெற இந்த நிதி தகுதி பெற்றுள்ளது.
கொவிட்-19 நிவாரணத் திட்டத்திலிருந்து நிதியுதவி பெற்ற 1,000க்கும் அதிகமான மாணவர்களில் 400 பேர் முன்னுரிமை நிதியிலிருந்துதான் உதவி பெற்றனர்.
நிதியுதவி பெற்ற மாணவர்கள் பட்டம் பெற்ற ஈராண்டுகளுக்குள் அதைப் பல்கலைக்கழகத்திடம் திருப்பிச் செலுத்த உறுதி கூறுவர். அவர்கள் பெற்ற தொகைக்காக வட்டி எதையும் செலுத்தத் தேவையில்லை.
இந்த முன்னுரிமை நிதிக்கு நன்கொடை வழங்கியவர்களில் என்டியு அறங்காவலரும் 'ட்ரஃபிகுரா' குழுமத்தின் ஆசிய-பசிபிக் வட்டாரத்துக்கான தலைமை நிர்வாகியுமான டான் சின் ஹுவீயும் அடங்குவார்.
"நிதியுதவி பெற்றுள்ள மாணவர்கள், வாழ்க்கைச் செலவினத்தைப் பற்றி கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்த முடியும்.
"இன்று தங்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்காக அவர்கள் நன்றிக்கடன் செலுத்துவர். அவர்களால் முடிந்தவுடன் நாளை இதே உதவிக்கரத்தை எதிர்காலத் தலைமுறை மாணவர்களுக்கும் வழங்குவர் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது," என்று அவர் கூறினார்.

