14 நாட்கள் 'டிரேஸ்டுகெதர்' செயலி செயல்பாட்டில் இருக்க வேண்டும்

14 நாட்கள் 'டிரேஸ்டுகெதர்' செயலி செயல்பாட்டில் இருக்க வேண்டும்

2 mins read
2fbb2550-44e4-4504-b38f-43aef4bd5f01
படம்: எஸ்டி -

நியூ­சி­லாந்து, புருணை ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வரு­வோர், இங்கு தங்­கி­யி­ருக்­கும் காலத்­தில் எந்­நே­ர­மும் 'டிரேஸ்­டு­கெ­தர்' செய­லி­யைப் பயன்­ப­டுத்த வேண்­டும். அத்­து­டன் சிங்­கப்­பூரை விட்­டுச் சென்ற பிறகு 14 நாட்­க­ளுக்­குத் தொடர்ந்து அச்­செ­ய­லி­யைத் தங்­க­ளின் கைபே­சி­யில் வைத்­தி­ருக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இரு­நாட்டு வரு­கை­யா­ளர்­களுக்கு, இங்கு தங்­கி­யி­ருக்­கும் காலத்­தி­லும் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வெளி­யே­றிய இரண்டு வாரங்­க­ளி­லும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னால், தொடர்­பு­க­ளின் தடங்­க­ளைக் கண்­ட­றி­வதை இப்­புது நிபந்­தனை எளி­மை­யாக்­கும்.

அவ்­வாறு அவர்­க­ளுக்­குக் கிருமி தொற்­றி­யி­ருந்­தால், சுகா­தார அமைச்­சுக்­குத் தேவை­யான தக­வல்­களை அவர்­கள் செயலி மூலம் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும்.

நியூ­சி­லாந்து, புருணை ஆகிய நாடு­க­ளுக்­குத் தன் எல்­லையை சிங்­கப்­பூர் திறக்­க­வுள்­ள­தாக சென்ற வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து பய­ணத்­துக்­கான நிபந்­த­னை­களை ஆணை­யம் நேற்று வெளி­யிட்­டது.

"பாது­காப்­பான முறை­யில் சிங்­கப்­பூர் விமா­னப் போக்­கு­வ­ரத்து மையம் புத்­து­யிர் பெறு­வ­து­டன் பொதுச் சுகா­தா­ரத்­திற்கு ஏற்­ப­டக்­கூ­டிய அபா­ய­மும் குறைந்த அள­வில் இருக்க வேண்­டும். இதற்கு இந்­தப் பயண நிபந்­த­னை­கள் கைகொ­டுக்­கும்," என்­றது ஆணை­யம். இரு நாட்டு வரு­கை­யா­ளர்­களுக்­குக் கூடு­த­லாக வேறு நிபந்­த­னை­களும் உண்டு என்­றது ஆணை­யம்.

அவர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வரு­வ­தற்கு முன், அதற்கு முந்­தைய 14 நாட்­க­ளை­யும் புருணை அல்­லது நியூ­சி­லாந்­தில் கழித்­தி­ருக்க வேண்­டும். இடை­யி­லேயே வேறு விமான நிலை­யங்­களில் இறங்­கா­மல் நேரடி விமா­னச் சேவை மூலம் அவர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தி­ருக்க வேண்­டும்.

இங்கு வந்­த­டைந்­த­தும் கொவிட்-19 பரி­சோ­த­னையை அடுத்து, விமான நிலை­யத்­தி­லி­ருந்து அவர்­கள் தங்­க­வுள்ள இடத்­திற்­குத் தனி­யார் போக்­கு­வ­ரத்து, டாக்சி, தனி­யார் வாடகை வண்டி ஆகி­ய­வற்­றில் மட்­டுமே பய­ணம் செய்ய வேண்­டும்.

பரி­சோ­தனை முடி­வு­கள் உறு­தி­யா­கும் வரை, அடுத்த 48 மணி நேரத்­திற்­குத் தாங்­கள் தங்­கி­யி­ருக்­கும் இடத்­தில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யி­லேயே அவர்­கள் இருக்க வேண்­டும்.

இரு­த­ரப்பு முடி­வாக அல்­லா­மல் சிங்­கப்­பூர் மட்­டுமே அதன் எல்­லை­களை இரண்டு நாடு­க­ளுக்­கும் திறந்­துள்­ளதை விமா­னப் போக்கு ­வ­ரத்து பங்­கு­தா­ரர்­கள் பாராட்­டி­னா­லும், இதன் தாக்­கம் அவ்­வ­ள­வாக இருக்­காது என்று கூறப்­ப­டு­கிறது.

வெளி­நாட்­டுப் பய­ணத்­தைத் தவிர்க்­கு­மாறு நியூ­சி­லாந்து அதன் மக்­க­ளுக்கு அறி­வு­றுத்தி வரு­கிறது. மக்­கள் வெளி­நா­டு­க­ளுக்­குப் போவதை புருணை தடை­செய்­துள்­ளது.