சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே அத்தியாவசியப் பயணங்கள் தொடங்க அனுமதிப்பதன் தொடர்பில் இரு நாடுகளும் கலந்தாலோசிக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சூடி நேற்று தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்குமிடையே வலுவான வர்த்தகத் தொடர்புகள் உள்ளன. இதனால் இருதரப்புத் தடையற்ற பயணத் தடத்தை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை இரு அமைச்சர்களும் தங்களின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இரு நாடுகளின் பொதுச் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் கருதி இந்த அத்தியாவசியப் பயணங்கள் அமையும் என்பதை இந்த ஏற்பாடு உறுதிசெய்யும் என்று அமைச்சு கூறியது.
இதுபோன்ற இருதரப்புத் தடையற்ற பயணத் தடத்தை மலேசியாவுடனும் சீனாவுடனும் சிங்கப்பூர் தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ளது. ஜப்பான் உட்பட இன்னும் பல நாடுகளுடன் இதைத் தொடரப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பொதுச் சுகாதார மற்றும் நிதி ஒத்துழைப்பை வலுவாக்குவது, பொருளியல் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது, பாதுகாப்பான பயணங்களுக்கு ஏற்பாடு செய்வது போன்ற அம்சங்களில் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் அணுக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கூறினர்.
மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள திருவாட்டி ரெட்னோ, இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங்கையும் சந்தித்தார்.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவது தொடர்பில் இருவரும் பேசியதுடன் தங்களின் இருதரப்பு உறவை மறுஉறுதிப்படுத்திக்கொண்டனர்.

