பயணத்துக்கு முன் பரிசோதனை: கடைசி நேரத்தில் திரண்ட பயணிகள்

பயணத்துக்கு முன் பரிசோதனை: கடைசி நேரத்தில் திரண்ட பயணிகள்

2 mins read
6fc7525b-d2e2-4511-a7f3-731c333fa2d5
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள முன்னாள் ஷுகூன் உயர்நிலைப் பள்ளியில் செயல்படும் வட்டார பரிசோதனை மையத்துக்குப் புதன்கிழமை  காலை 9 மணிக்கும் முற்பகல் 10.30 மணிக்கும் இடையில் செல்லும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. படம்: திமத்தி டேவிட் -

சீனாவுக்குச் செல்லும் விமானப் பயணிகள் அதற்கு முன், அவசரம் அவசரமாக இன்று முன்னாள் ஷுகூன் உயர்நிலைப்பள்ளிக்கு விரைந்தனர்.

கொவிட்-19 பரிசோதனை செய்து கொண்டு தங்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பதை மெய்ப்பிக்க அவர்கள் அங்கு வரிசை பிடித்து நின்றனர்.

சீனாவுக்கு ஆகஸ்ட் 28க்குப் பிறகு செல்லும் சிங்கப்பூர் பயணிகள் தாங்கள் புறப்பட்டுச் செல்வதற்கு முன் ஐந்து நாட்களுக்குள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டு தங்களுக்குத் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இங்குள்ள சீனத் தூதரகம் கடந்த வெள்ளிக்கிழமை தனது இணையத் தளத்தில் அறிவித்தது.

இதன் காரணமாகவே கடைசி நேரத்தில் பயணிகள் நேற்று அங்கு குவிந்தனர்.

ஸ்கூட் நிறுவனம், சீனாவின் குவாங்சூ நகருக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று செல்ல தனது டிஆர்100 என்ற விமானத்தில் முன் பதிவு செய்துள்ள பயணிகளுக்குக் கட்டாய பரிசோதனை நிபந்தனை பற்றி அவசர மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தெரியப்படுத்தியது.

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள முன்னாள் ஷுகூன் உயர்நிலைப் பள்ளியில் செயல்படும் வட்டார பரிசோதனை மையத்துக்குப் புதன்கிழமை காலை 9 மணிக்கும் முற்பகல் 10.30 மணிக்கும் இடையில் செல்லும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து அந்த நிலையத்தில் நேற்று 200 பேருக்கும் அதிகமான பயணிகள் திரண்டிருந்ததாகத் தெரியவந்தது.

அவர்களில் சிலர் குடும்பமாக வந்திருந்தார்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

சீனாவின் பல நகர்களுக்கு 'ஸ்கூட்' நிறுவனமும் 'சைனா சதர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனமும் இயக்கும் விமானங்களில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டுகள் அவர்களிடம் இருந்தன. அந்தச் சீட்டுகளைக் காட்டிய பிறகே பரிசோதனைக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, சிங்கப்பூரில் இருந்து ஆகஸ்ட் 19 ஆம் தேதி சீனாவின் டியான்ஜின் நகருக்குச் சென்ற 14 பயணிகளுக்கு கொவிட் -19 தொற்று இருப்பதாக முன்பு தெரியவந்தது.

ஆனால் அவர்களில் 12 பேருக்குத் தொற்று இல்லை என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர இரண்டு பேரைப் பொறுத்தவரை இன்னமும் முடிவு தெரியவில்லை.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசித்தவர்களான அந்த 12 ஊழியர்களும் தொற்றில் இருந்து மீண்டுவிட்டதாக ஊடகக் கேள்விகளுக்கு அளித்த பதிலில் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மெய்நிகர் கூட்டம் ஒன்றில் சீனாவின் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அளித்த விளக்கத்தில் அமைச்சு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.