அழகு பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கு புதிய திறன் மேம்பாட்டுக் கட்டமைப்பு

அழகு பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கு புதிய திறன் மேம்பாட்டுக் கட்டமைப்பு

1 mins read
af3279eb-7d5d-4133-91ab-2c401cce6108
-

அழகு பராமரிப்புத் துறையின் 13,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களின் வாழ்க்கைத்தொழிலைத் திட்டமிடுவதற்குப் புதிய திறன் மேம்பாட்டுக் கட்டமைப்புத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

'அழகுச் சேவைகள் திறன் கட்டமைப்பு' எனும் இப்புதிய திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார் வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங்.

'நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி காணும் ஆற்றல்' இத்துறையில் உள்ளதென கூறிய அவர், இப்புதிய கட்டமைப்புத் திட்டம் வழி வர்த்தகங்களும் ஊழியர்களும் திறன் பயிற்சிகள் பெற்று வலுப்பெறலாம் என்றார்.

கொவிட்-19 கிருமித்தொற்று சூழலால் பல்வேறு சவால்கள் ஏற்பட்டிருந்தாலும் அழகு மற்றும் நல்வாழ்வுச் சேவைகளுக்கான தேவை தொடர்ந்து பலமாக இருந்து வருவதாக அவர் சுட்டினார். ஆண்டு அடிப்படையில் அழகுச் சேவைத் துறை 10% வளர்ச்சி கண்டு வருவதாக அவர் பகிர்ந்துகொண்டார். புதிய கட்டமைப்பின் கீழ், தொழில் முன்னேற்றப் பாதை தெள்ளத்தெளிவாகத் திட்டமிடப்படுகின்றன.

இதன்படி ஒரு குறிப்பிட்ட வேலையில் தொழிற்பயிற்சிக்கு சேரும் ஒருவர் படிப்படியாக நிர்வாகப் பொறுப்புக்குக்கூட முன்னேறலாம்.

துறையில் ஏற்கெனவே உள்ள ஊழியர்கள், தங்களின் திறன்களை மேலும் வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தலாம். புதிதாக இத்துறையில் இணைவோர், புதிய கட்டமைப்பின் மூலம் துறையைப் பற்றி நன்குப் புரிந்துகொள்வதுடன் வெவ்வேறு வேலைகளுக்குரிய குறிப்பிட்ட திறன்களையும் அறிந்திடலாம்.

பயனீட்டாளரின் அதிகரிக்கும் தேவைகளுக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் சாத்தியமும் புதிய கட்டமைப்பின் மூலம் உண்டு என்றார் திருவாட்டி லோ.