சிங்கப்பூர் தொடர்ந்து வளர வேண்டுமானால் அது தன்னுடைய பொருளியலைப் பாதுகாப்பான முறையிலும் நிலைத்தன்மையோடும் மீண்டும் திறந்துவிட வேண்டி இருக்கிறது என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு செய்ய வேண்டுமானால் நிறுவனங்கள் படிப்படியாக தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டும். அதிக ஆபத்துள்ள நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, வேலையிடங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கிருமித்தொற்று ஏற்படும்போது அவற்றை உடனே கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் வகையில் பரிசோதனை உள்ளிட்ட பலவற்றையும் கணிசமான அளவிற்கு விரிவுபடுத்தப் போவதாக அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இப்படி செய்வதன் மூலம் பொருளியலின் இதர பகுதிகள் தொடர்ந்து செயல்பட முடியும் என்றார் அவர்.
அதிபர் ஹலிமா யாக்கோப் புதிய நாடாளுமன்றத்தைத் தொடங்கிவைத்து ஆற்றிய உரைக்கான தமது அமைச்சின் பிற்சேர்க்கையில் திரு சான் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
வர்த்தக தொழில் அமைச்சு தொழில் நிமித்தமாக பாதுகாப்பான முறையில் குறுகிய, நீண்டகால பயணங்கள் இடம்பெற வசதிகளைச் செய்துகொடுக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், அனைத்துலக பயணங்களை மீண்டும் தொடங்கும் கண்ணோட்டத்தில் அது இவ்வாறு செய்யும் என்றார்.
உலக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு புதிய வேலைகளை உருவாக்க ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவும் ஒரு வழியாக இது இருக்கும் என்றாரவர்.
அதிபர் உரையின் பிற்சேர்க்கையாக நேற்று ஐந்து அமைச்சுகள் பல விவரங்களை அறிவித்தன.
வர்த்தக தொழில் அமைச்சு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களும் செயல்பாடுகளும் அவற்றில் இடம்பெற்றிருந்தன.
சிங்கப்பூர் தன்னுடைய உலகளாவிய தொடர்புகளை பலப்படுத்த வேண்டும்.
பலவற்றுக்கும் மையமாக திகழ்கின்ற சிங்கப்பூர் இந்த நிலையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
சந்தைகள், விநியோக முறை, தொழில்நுட்பம், ஆற்றல் ஆகியவற்றுக்கு உலகத்துடன் கூடிய தன்னுடைய தொடர்புகளை சிங்கப்பூர் வலுப்படுத்த வேண்டும்.
வர்த்தக வழிகள் தங்கு தடையின்றி இருப்பதை, ஒத்த கருத்துடைய நாடுகளுடன் சேர்ந்து சிங்கப்பூர் மறுஉறுதிப்படுத்தும் என்றும் அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூரை மையமாகப் பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கும் தளவாடப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் புதிய போட்டித்திறன் அனுகூலங்களை வழங்கும் வகையில் பல மாதிரியான போக்குவரத்து ஏற்பாடுகளை சிங்கப்பூர் உருவாக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாறுகின்ற உலகப் பொருளியலைக் கைகொள்வதற்கு ஏற்ற உதவிகளைச் செய்து அதன்மூலம் சிங்கப்பூரர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பல வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதியை அமைச்சர் மீண்டும் தெரிவித்தார்.
நிறுவனங்கள் உருமாறவும் அனைத்துலகமயமாகவும் வளர்ச்சி காணவும் பல அமைப்புகளுடன் சேர்ந்து அமைச்சு செயல்படும் என்றும் அவர் கூறினார்.
இருந்தாலும் எல்லா வேலைகளையும் எல்லா நிறுவனங்களையும் பாதுகாத்துவிட முடியாது என்று அவர் எச்சரித்தார்.
ஆயினும் ஆட்குறைப்புக்கு ஆளானவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு புதிய வேலைகளைப் பெற உதவி கிடைக்கும் என்று அமைச்சர் திரு சான் உறுதிபட கூறினார்.

