சிங்கப்பூர் நிலைத்தன்மை மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தவிருக்கும் வேளையில், அத்துறையில் அடுத்த பத்து ஆண்டுகளில் 55,000 வேலைகள் உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் 4,000 வேலைகள் அடுத்த 12 மாதங்களில் உருவாக்கப்படும் என்று நேற்று அதிபர் உரை மீதான நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் பிற்சேர்க்கையில் தெரிவித்தார் அமைச்சர் கிரேஸ் ஃபூ.
உலகளாவிய உணவு விநியோகத் தொடரில் அதிர்ச்சி அலைகள் நிலவிக்கொண்டிருக்கும் தருணத்தில் உணவு பாதுகாப்பை அதிகரிக்க உள்ளூர் உற்பத்தியைப் பெருக்க சிங்கப்பூர் கவனம் செலுத்தி வரும் வேளையில், உயர் தொழில்நுட்ப வேளாண் மற்றும் மீன்வளர்ப்பு தொழில்துறையில் திறனாளர்களுக்கான வேலைகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பொதுச் சுகாதாரத் தரநிலைகளை உயர்த்துவதற்கான அவசரத்தை கொவிட்-19 கொள்ளைநோய் உண்டாக்கியிருப்பதால், 'உணவு பாதுகாப்பு பராமரிப்பாளர்கள்' உணவு அமைப்புகளில் நியமிக்கப்படுவார்கள் என்றும் திருவாட்டி ஃபூ சொன்னார்.
"துப்புரவு மற்றும் கழிவு நிர்வாக நிபுணர்களுக்கான திறன்களை அதிகரிப்பதால், அவர்கள் கிருமி நீக்கம், மறுசுழற்சி, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் முக்கிய நிபுணத்துவ பொறுப்புகளை ஏற்க முடியும்.
"மேலும், பருவநிலை மாற்றம், பருவநிலை அறிவியல் போன்ற குறிப்பிடத்தக்க துறைகளுக்குக் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கி அதன் மூலம் திறனாளர்களை உருவாக்கி, சிங்கப்பூரின் நீடிக்க நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்கலாம்.
"இதன் மூலம் நீடித்த நிலைத்தன்மை தொடர்பான சவால்களையும் எதிர்காலத்துக்குத் தேவையான வாய்ப்புகளையும் எதிர்கொள்ள ஊழியரணிக்குப் பயிற்சியளிக்கலாம்," என்றும் அமைச்சர் ஃபூ விளக்கினார்.
ஊழியரணியை உருவாக்குவது ஒருபுறம் இருக்க, சுற்றுப்புறவியல் சவால்களைச் சந்திக்கவும் அரசாங்கம் சில கொள்கைகளை அறிமுகப்படுத்தும்.
உதாரணத்துக்கு, சுகாதாரத் தரநிலைகளை மேம்படுத்துதல், உள்ளூர் வேளாண் போன்ற உள்கட்டமைப்பை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றைச் சொல்லலாம்.
இதனால் உலகளாவிய உணவு விநியோகத் தொடரில் பற்றாக்குறை நிலவினாலும் சிங்கப்பூரின் உணவு விநியோகம் அதனால் பாதிக்கப்படாது என்றும் விவரிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் தண்ணீர் பாதுகாப்பும் தொடர்ந்து நமது முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்று வலியுறுத்திய அமைச்சர், சாங்கியில் உள்ள புதுநீர் ஆலை விரிவுப்படுத்தப்படும் என்றார்.
"சிங்கப்பூரின் மரபணுவில் நீடித்த நிலைத்தன்மை எப்போதும் இருந்து வந்துள்ளது. அது இப்போது நமது திட்டங்கள், கொள்கைகள், செயல்முறைகள் ஆகியவற்றில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும்.
"அதனால்தான் முன்பு சுற்றுப்புற, நீர்வள அமைச்சாக இருந்தது இப்போது நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது," என்றார்
சிங்கப்பூரில் கொவிட்-19 நிலவரம், சாதனை அளவில் பெருகிக்கொண்டிருக்கும் டெங்கி பரவல் ஆகியவற்றைச் சமாளிக்கும் அதே வேளையில், இத்தகைய தொற்று நோய்க்கு எதிராக பொதுச் சுகா தாரத் தரநிலைகளை உயர்த்துவதே தமது அமைச்சின் உடனடி முன்னுரிமைகளாகக் குறிப்பிட்ட திருவாட்டி ஃபூ, இதன் தொடர்பில் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் தமது உரையில் தெரி வித்தார்.

