பெண்டமியரில் தந்தை-மகன் கத்திக்குத்து: குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முதியவர்

2 mins read
c1ee4c6b-60aa-40a2-a3f3-b006f44212ca
சட்டையில் ரத்தக் கறையுடன் காணப்படும் திரு கோ, தம் மகனுக்கு உதவுமாறு கேட்கும் காட்சி, கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது. படம்: வான்பாவ் -

தந்தை-மகனை பெண்டமியர் சாலையில் தாக்கியதாக 73 வயது கியோ கிம் ஹோக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கத்தியைக்கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவிக்கும் குற்றம் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் நேற்று கியோ மீது பதிவாகின.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று பகல் 1 மணியளவில் 69 வயது திரு கோ ஹங் குவாங் மற்றும் 31 வயது திரு ரேமண்ட் கோ மெங் சுனாட் ஆகியோரை கியோ கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

கியோவுக்கும் தாக்கப்பட்ட தந்தை-மகனுக்கும் இடையே என்ன உறவு என்ற விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.

இந்நிலையில் மனநல மருத்துவமனையில் கண்காணிப்பில் கியோ வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு காப்பிக் கடைக்கு மேல் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் திரு கோ இருந்தபோது, கதவை உதைத்து வந்து கியோ அவரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.

அருகில் இருந்த திரு கோவின் மகன் திரு ரேமண்ட், சத்தம் கேட்டு உடனே வந்து தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயன்றார்.

தமக்கு உதவப்போய் மகனுக்கும் காயம் ஏற்பட்டுவிட்டதாக திரு கோ சீன நாளிதழிடம் கூறியிருந்தார். பயன்படுத்தப்பட்ட கத்தி 15 செண்டிமீட்டர் நீளமுடையது என்று சீன நாளிதழ் குறிப்பிட்டிருந்தது.

பெண்டமியர் சாலை புளோக் 27ல் அமைந்துள்ள ஓர் அலுவலகப் பகுதியில் நடந்த இச்சம்பவம் குறித்து போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.

திரு கோ ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கும் அவரின் மகன் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட கியோவும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கியோவின் வழக்கு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.