சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் 'பெர்செப்ட் சொலுயூஷன்ஸ்' (Percept Solutions) எனும் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் நிறுவனம் தொடங்கப்பட்டது. அது துரிதமாக வளர்ந்து இன்று 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்படுகிறது.
வங்கிகள், வாகன நிறுவனங்கள் போன்ற அமைப்புகளுக்குச் சேவை வழங்கும் இந்நிறுவனத்தின் மனிதவள தேவைகளுக்கு அரசாங்கத்தின் திட்டமும் கைகொடுத்துள்ளது. இந்த வேலை ஆதரவு திட்டம் அளிக்கக்கூடிய (Career Support Programme) பலன்களைப் பற்றி சிங்கப்பூர் ஊழியரணி நிபுணர், 'பெர்செப்ட் சொலுயூஷன்ஸ்' நிறுவனத்தின் இயக்குநரான திரு சதீஷ் கொசராஜுவிடம் விளக்க அவரும் உடனடியாக திட்டத்தில் சேர முடிவெடுத்தார்.
சிங்கப்பூர் ஊழியரணி (WSG), வேலை நியமன, வேலைத்தகுதி கழகம் (e2i) இணைந்து வழங்கும் இத்திட்டம், சிங்கப்பூரிலேயே நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (PMETs) ஆகியோரை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்க ஊக்குவிக்கிறது.
"மூத்த ஊழியர்களின் வேலை அனுபவம் ஒரு நிறுவனத்திற்கு வலுசேர்க்கிறது. ஏனெனில் ஒரு பிரச்சினையை வேறு ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்து, அதற்கு எப்படி தீர்வு காண முடியும் என்பதை அவர்களால் பரிந்துரைக்க முடிகிறது," என்று கூறினார் திரு சதீஷ்.
கடந்தாண்டு இறுதியிலிருந்து இதுவரையில் மொத்தம் 11 ஊழியர்கள் இத்திட்டத்தின் வழி 'பெர்செப்ட் சொலுயூஷன்ஸ்' நிறுவனத்தில் சேர்த்துள்ளனர்.
ஒரு நிறுவனத்தைப் புதிதாக தொடங்கும்போது வரவுசெலவுக் கணக்கு ஒரு நிலைத்தன்மையை அடையச் சற்று காலம் எடுக்கும் என்று சொன்ன திரு சதீஷ், இத்திட்டத்தில் கிடைக்கும் சேமிப்பு தமது நிறுவனத்திற்குப் பலன் தந்துள்ளதாக குறிப்பிட்டார்.
பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்த 60 வயதுக்கும் மேற்பட்ட ஓர் அனுபவம்மிக்க ஊழியரை இத்திட்டத்தின் வழி தம் நிறுவனத்தில் சேர்த்ததாகவும் திரு சதீஷ் பகிர்ந்துகொண்டார்.
உலகளாவிய வேலை அனுபவத்தை அந்த ஊழியர் கொண்டிருப்பதால், தற்போது கொடுக்கப்பட்ட பணிகளை அவர் திறம்பட செய்து வருவதாக திரு சதீஷ் சொன்னார்.
"வேலை இழந்த மூத்த ஊழியர்களை நிறுவனத்தில் சேர்க்கும்போது அவர்களது வேலை அனுபவம், நிறுவனத்திற்குப் பலனளிக்கும் என்பதை நிறுவனங்கள் உணர வேண்டும். வேலையில் சேர்க்கும்போது, அவர்களுக்கு ஊக்கம் தந்து நிறுவனத்தில் அவர்களது பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை முதலாளிகள் விளக்குவது முக்கியம்," என்று வலியுறுத்தினார் திரு சதீஷ், 43.
சிங்கப்பூர் ஊழியரணி (WSG) எப்படி உங்கள் வேலை தேடும் முயற்சிக்கு உதவ முடியும் என்பதை அறிய விரும்பினால், go.gov.sg/careeradvice7 என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று வேலை வாய்ப்பு ஆலோசகரைச் சந்திக்க பதிவு செய்யலாம்.

