மோசடிச் சம்பவங்களை கையாள புதிய இயக்கம்

மோசடிச் சம்பவங்களை கையாள புதிய இயக்கம்

2 mins read
8c17daa2-3ca0-4590-921e-1b8c4a7986d8
-

ஐயுறும் மனப்பான்மையும் ஒரு விஷயம் உண்மை என்று நம்பவே முடியாத அளவிற்கு இருக்கிறது என்ற விழிப்புநிலையும் மோசடிக்கு ஆளாகிவிடாமல் இருப்பதற்கான முதல்நிலை தற்காப்பு என்று தேசிய குற்றவியல் தடுப்பு மன்றத்தின் தலைவர் ஜெரல்ட் சிங்கம் கூறியுள்ளார்.

இவ்வாண்டின் முதற்பாதியில் பத்து வகையான பெரும் மோசடிப் பிரிவில் 7,253 மோசடிச் சம்பவங்கள் பதிவாகின.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,027 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அதைவிட கூடுதலாக 4,226 மோசடிச் சம்பவங்கள் இவ்வாண்டின் முதற்பாதியில் பதிவாகின. இணைய வணிக மோசடிகள், ஆள்மாறாட்ட மோசடிகள், கடன் மோசடிகள், வங்கி தொடர்பான மோசடிகள் முதன்மை வகித்தன.

பணத்தை அபகரிக்க மோசடிக்காரர்கள் இணையத்தில் சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகிறார்கள் என்பதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

தங்களது தொலைபேசி எண்களை மறைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என மோசடிக்காரர்கள் புதுமையான பல வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.

இத்தகையோரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வரும்போது அவற்றை சந்தேக நோக்கத்துடன் கையாளுவதன் அவசியத்தை திரு சிங்கம் வலியுறுத்தினார்.

"மோசடிகளுக்கு எதிராக தடுப்பு மருந்து எதுவும் இல்லை. அவற்றுக்கு எதிராக நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து விழிப்புடன் இருந்து சந்தேக நடவடிக்கைகளைக் கண்டறிவதே ஆகச்சிறந்த வழி," என்று அவர் விவரித்தார்.

மோசடிக்காரர்களிடமிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிங்கப்பூர் போலிஸ் படையும் தேசிய குற்றவியல் தடுப்பு மன்றமும் 'அறிகுறிகளைக் கண்டறியுங்கள். குற்றச்செயல்களை நிறுத்துங்கள்' என்ற இயக்கம் ஒன்றை நடத்தி வருகின்றன.

இம்மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் வரை அந்த இயக்கம் நடத்தப்படும். உண்மையான மோசடிச் சம்பவங்களைப் பொதுமக்களிடம் பகிர்ந்து, மோசடி அறிகுறிகளை எப்படி கண்டறிவது என்பதை இந்த இயக்கம் எடுத்துரைக்கிறது.