உலக விருதுக்குத் தேர்வுபெற்றது சுவா சூ காங் நீர் சுத்திகரிப்பு ஆலை

2 mins read
33190abf-5a8e-40c0-b51f-144e2aec6d4e
மூன்­றாண்டு மேம்­பாட்­டுப் பணி­க­ளின்­போது நவீன தொழில்­நுட்­பங்­கள் சுவா சூ காங் நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை­யில் புகுத்­தப்­பட்­டன. படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புதி­தாக மேம்­ப­டுத்­தப்­பட்ட சுவா சூ காங் நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை இவ்­வாண்­டின் சிறந்த தண்­ணீர் திட்­டப்­ப­ணி­யாக உலக அள­வில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு உள்­ள­தாக பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் தெரி­வித்து உள்­ளது.

2020ஆம் ஆண்­டுக்­கான உலக தண்­ணீர் விரு­துக்கு அந்த ஆலை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் நேற்று கழ­கம் கூறி­யது.

அனைத்­து­லக தண்­ணீர் துறை­யில் மிக­வும் அவ­சி­ய­மான செய­லாக்­கத்­தி­றனை மேம்­ப­டுத்­து­தல், புத்­தாக்­கத்­தைக் கடைப்பிடித்­தல் உள்­ளிட்ட சாத­னை­களை அங்­கீ­க­ரிக்­கும் வண்­ணம் உல­க­ள­வி­லான இந்த விருது கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஆண்­டு­தோ­றும் வழங்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் சுத்­தி­க­ரிப்பு ஆலை­யைப் போலவே அமெ­ரிக்கா, பிலிப்­பீன்ஸ், ஹாங்­காங் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை­களும் இவ்­வாண்­டின் விரு­துக்­குத் தகுதி பெற்­றுள்­ளன.

உலக தண்­ணீர் அறி­வாற்­றல் நிறு­வ­னம் இந்த விருதை வழங்கி வரு­கிறது. பெரு­மைக்­கு­ரிய இந்த உலக தண்­ணீர் விருதை பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் தொடர்ந்து மூன்­றாம் ஆண்­டா­கப் பெற்­றுள்­ளது.

2018ஆம் ஆண்­டில் உலு பாண்­டான் கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை தண்­ணீர்/கழிவு நீர் திறன்­திட்ட விரு­தைப் பெற்­றது. எரி­சக்­தி, ஊழி­யர்­க­ள், நிலப்பரப்பு ஆகிய அம்சங் களை இந்த ஆலை குறைவாகப் பயன்­ப­டுத்­து­கிறது. இடத்­தைச் சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­தும் தொட்­டி­கள், எரி­சக்­தி­யைக் குறை­வா­கப் பயன்­ப­டுத்­தும் முறை­கள், தானி­யக்­கக் கட்­டுப்­பாட்­டுச் சாத­னங்­கள் போன்­றவை அங்கு செய­லில் உள்­ளன.

கடந்த ஆண்­டுக்­கான கடல் நீரை குடி­நீ­ராக்­கு­வ­தற்­கான விருதை துவாஸ் ஆலை தட்­டிச் சென்­றது.

சுவா சூ காங் நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை, உலு பாண்­டான் கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை, துவாஸ் கடல்­நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஆகிய மூன்­றும் பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­பவை.

சுவா சூ காங் நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை சிங்­கப்­பூ­ரின் ஆகப் பழ­மை­யா­னது. 1975ஆம் ஆண்­டி­லும் தொடர்ந்து 1981ஆம் ஆண்­டி­லும் இரு கட்­டங்­க­ளா­கக் கட்­டப்­பட்­டது.

உல­கி­லேயே ஆகப்­பெ­ரிய பீங்­கான் சவ்­வுத்­தி­ற­னு­டன் கூடிய இந்த சுத்­தி­க­ரிப்பு ஆலையை மேம்­ப­டுத்­தும் பணி­கள் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்­கின. சுமார் $162 மில்­லி­யன் செல­வி­லான புதுப்­பிப்­புத் திட்­டம் மூன்­றாண்­டு­கள் நீடித்­தது.

பீங்­கான் சவ்­வுத்­தி­றன் மூலம் நீரை சுத்­தி­க­ரிக்­கும் முறை அதிக ஆற்­றல் வாய்ந்­தது. இதற்கு முன்­னர் பின்பற்றப்பட்ட நீரி­லி­ருந்து மணலை வடி­கட்­டும் முறை­யைக் காட்­டி­லும் இது மேம்­பட்­டது.