விமானத்தின் கட்டமைப்பைப் பாதிக்கும் இரண்டு தயாரிப்புக் குறைபாடுகள் உலகின் எட்டு போயிங் 787 ட்ரீம்லைனர் விமானகங்களில் காணப்படுகின்றன.
அவற்றுள் தனது விமானமும் அடங்கும் என்று நேற்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) தெரிவித்தது. தனது போயிங் 787-10 ரக விமானங்களில் ஒன்று தொழில்நுட்பக் கோளாற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தமக்குத் தெரியும் என்று அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"அந்த விமானம் தற்போது சேவையில் இல்லை. கோளாற்றைச் சரிசெய்வதன் தொடர்பில் போயிங் நிறுவனத்துடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அணுக்கமாகப் பணியாற்றும்," என்றது அந்த அறிக்கை.
பாதிக்கப்பட்டு இருக்கும் எட்டு விமானங்களையும் அந்தந்த விமான நிறுவனங்கள் சேவையில் இருந்து அகற்றவேண்டும் என போயிங் கேட்டுக்கொண்டதாக 'த ஏர் கரண்ட்' எனப்படும் விமானப் போக்குவரத்து செய்தி இணையத்தளம் நேற்று முன்
தினம் தெரிவித்து இருந்தது. இந்த எட்டு விமானங்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை.
பாதிக்கப்பட்ட விமானங்களில் சில யுனைடெட் ஏர்லைன்ஸ், ஏர் கனடா ஆகிய நிறுவனங்களிலும் உள்ளன. கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இரு குறைபாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் தமது வடிவமைப்பின் தரத்திற்கான தேவைகளோடு அவை ஒத்துப்போகவில்லை என்றும் அந்த இணையத்தளம் வாயிலாக போயிங் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட எட்டு விமானங்களும் மீண்டும் சேவையைத் தொடங்குமுன் பழுதுநீக்கப்பட்டு நன்கு சோதிக்கப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டு உள்ளது.

