தமது மனைவியைக் கொன்றதாக சீன நாட்டவர் ஒருவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
காணொளிக் காட்சி வழியாக நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் குயி ஹுவான், 24.
கடந்த வியாழக்கிழமை புளோக் 211 பூன் லே பிளேசின் வெற்றுத் தளத்தில் குயியின் மனைவி 26 வயது லியாங் ஸுவேசியூவின் உடல் கிடந்தது.
குயியிடம் குற்றச்சாட்டுகள் விவரிக்கப்பட்டபோது அவர் எந்த உணர்வின்றியும் காணப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் உதவி கேட்டு தமக்கு அழைப்பு வந்ததாக போலிஸ் கூறியது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அந்த மாது அசைவின்றி கிடந்ததைக் கண்டறிந்தனர்.
இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவின்றி இருந்தார். அவர் உயிரிழந்துவிட்டதாக இரவு 9.58 மணிக்கு மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
கொலைச் சம்பவம் நிகழ்ந்து மூன்று மணி நேரத்திற்குள் குற்றவியல் புலன் விசாரணைத் துறை மற்றும் ஜூரோங் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குயியை கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து மேல் விவரம் கேட்டறிய பூன் லே புளோக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலரிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு பேசியது.
புளோக்கின் வெற்றுத் தளத்தில் மாது ஒருவர் அசைவின்றி காணப்பட்டதாக தமது சகோதரர் தம்மிடம் கூறியதைத் தொடர்ந்து, அந்த மாதுக்கு உதவ வீட்டிலிருந்து தாம் விரைந்ததாக குடியிருப்பாளர் ஒருவர் சொன்னார்.
குயி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது பிரம்படிகளுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

