துவாஸ் சோதனைச்சாவடியில் கிட்டத்தட்ட $163,000 பெறுமானமுள்ள 'ஹெராயின்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைக் கடத்தியதாக கூறப்படும் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் போலிஸ் படை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை துவாஸ் சோதனைச்சாவடியின் சரக்கு வாகனங்கள் வரும் பகுதியில் சோதனை நடத்தினர்.
அன்று மாலை 5.40 மணியளவில், மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரி ஒன்று கூடுதல் சோதனைகளுக்காக நிறுத்தப்பட்டது. அப்போது அதில் 2 கிலோகிராமுக்கும் கூடுதலான 'ஹெராயின்' போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் போலிஸ் படை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் 35 வயது லாரி ஓட்டுநரும் லாரியில் இருந்த 23, 37 வயதான இரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த மூவரும் மலேசியர்கள்.
பரிசோதனைக்கு முன்பாக லாரியில் இருந்த அனைத்து உடைமைகளையும் வெளியேற்றுமாறு அந்த மூவரிடமும் கூறப்பட்டது. அப்படி இருந்தும் பரிசோதனையின்போது லாரிக்குள் கறுப்புநிற பை ஒன்று இருந்ததை அதிகாரி ஒருவர் கண்டறிந்தார். அதில் 'ஹெராயின்' என நம்பப்படும் ஐந்து பாக்கெட்டுகள் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மொத்த எடை 2.321 கிலோகிராம்.
அந்த மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள 'ஹெராயின்' போதைப்பொருள், ஒரு வாரத்திற்கு சுமார் 1,105 போதைப்புழங்கிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானது எனக் கூறப்படுகிறது.

