கென்ட் ரிட்ஜ் ரயில் நிலையத்தில் நன்றி கூறும் வாசகங்களுடன் காட்சியளிக்கும் சுவர்

கென்ட் ரிட்ஜ் ரயில் நிலையத்தில் நன்றி கூறும் வாசகங்களுடன் காட்சியளிக்கும் சுவர்

2 mins read
4612d80f-a616-4ec9-8cf8-1841a9916939
-

பொதுப் போக்குவரத்து பயணங்களின்போது தாங்கள் நேரில் கண்ட அக்கறைமிகுந்த செயல்கள் குறித்து புதிய இணையவாசல் ஒன்றில் பயணிகள் பதிவிட முடியும்.

அடுத்த மாதம் தொடங்கப்படவிருக்கும் அந்த இணையவாசல், 'அக்கறைமிக்க எஸ்ஜி பயணிகள் குழு' அறிமுகப்படுத்த இருக்கும் புதிய முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைகிறது.

வட்டப் பாதயில் உள்ள கென்ட் ரிட்ஜ் எம்ஆர்டி நிலையத்தில் மெய்நிகர் வழியாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் புதிய முயற்சி குறித்து அறிவிக்கப்பட்டது.

கொவிட்-19 நோய் பரவலை எதிர்த்துப் போராடிவரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் காட்சியளிக்கும் சுவர் ஒன்றும் கென்ட் ரிட்ஜ் எம்ஆர்டி நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

'அக்கறைமிக்க எஸ்ஜி பயணிகள் குழு'வுடனான பங்காளித்துவத்துடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் சங்கம் இந்தச் சுவரைத் தயாரித்துள்ளது.

இன்றைய மெய்நிகர் நிகழ்ச்சியில் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஊழியர்கள், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடன் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங்கும் பங்கேற்றார்.

'அக்கறைமிக்க எஸ்ஜி பயணிகள் குழு' வழங்கிய கைசுத்திகரிப்பான், உணவு பானப் பற்றுச்சீட்டு, தின் பண்டங்கள் அடங்கிய பராமரிப்புப் பைகளைப் பொதுப் போக்குவரத்து ஊழியர்களும் மருத்துவமனை பணியாளர்களும் பெற்றுக்கொண்டனர்.

"நாம் வாழும் இந்தச் சிரமமான காலகட்டத்தில் நமது நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வேலையும் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், நம்மைச் சுற்றியுள்ள சக சிங்கப்பூரர்கள், நமது குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் உதவியும் கனிவன்பும் நாம் அனைவருக்கும் பக்கபலமாக இருக்கும்," என்று அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஜனவரியில் 'அக்கறைமிக்க எஸ்ஜி பயணிகள் குழு' அமைக்கப்பட்டது. உடற்குறை அல்லது மருத்துவப் பிரச்சினைகள் கொண்ட சிறப்புத் தேவைகளுடைய பயணிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அடுத்த மாதம் காணொளி இயக்கம் ஒன்றை அக்குழு அறிமுகப்படுத்த இருக்கிறது.

உண்மையான வாழ்க்கை அனுபவங்களைச் சித்திரிக்கும் குறும்படத் தொடரை வெளியிடுவதன் மூலம் பொதுமக்களிடையே ஒருவர் மற்றொருவருக்குப் பரிவு காட்டும் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என அந்தக் குழு நோக்கம் கொண்டுள்ளது.

புதிதாக தொடங்கப்படவுள்ள இணையவாசலிலும் சமூக ஊடகங்களிலும் ஒவ்வொரு மாதமும் இந்தக் குறும்படத் தொடர் வெளியிடப்படும்.